| ADDED : டிச 10, 2025 08:14 AM
குன்னுார்: குன்னுார் காட்டேரி பகுதியில் எம்.எல்.ஏ., நிதியில் கட்டப்பட்டு வரும் ரேஷன் கடை தரமில்லாமல் கட்டுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. குன்னுார் காட்டேரி பகுதியில், எம்.எல்.ஏ., நிதியில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்படும் புதிய ரேஷன் கடை தரமில்லாமல் உள்ளதாக, கலெக்டருக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் ஹேன்குமார் கூறுகையில், ''காட்டேரி பகுதியில், கட்டிய நிழற்குடை திறப்பு விழாவின் போது, அரசு கொறடா ராமச்சந்திரன், அப்பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் மீது அதிருப்தி தெரிவித்தார். தற்போது நகராட்சியால் கட்டப்படும் ரேஷன் கடையின் கட்டுமான பணியிலும் தரமில்லை. தேசிய நெடுஞ்சாலை துறையினர் மண் கொட்டிய இடத்தில் அடித்தளம் முறையாக மேற்கொள்ளவில்லை. எனவே, அதிகாரிகள் ஆய்வு செய்து தரமான முறையில் ரேஷன் கடை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார். குன்னுார் நகராட்சி பொறியாளர் வேலுச்சாமி கூறுகையில்,''காட்டேரி ரேஷன் கடை கட்டுமானத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து புகார் கொடுத்தால், நேரடியாக ஆய்வு செய்து, தீர்வு காணப்படும்,'' என்றார்.