‘சிதிலமடைந்த கட்டடத்தை அகற்றணும்’
பந்தலூர்: பந்தலூர் மைதானத்தில் ஆபத்தான நிலையில், பாழடைந்துள்ள கட்டடத்தை அகற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது. பந்தலூர் பஜாரை ஒட்டி நகராட்சி கட்டுப்பாட்டில் மைதானம் அமைந்துள்ளது. சதுப்பு நிலமாக உள்ளதால், கோடை காலத்தில் மட்டுமே மைதானம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மைதானத்தின் மையப்பகுதியில், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய பேரூராட்சி சார்பில் பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டது. அதன்பின், மாற்றுத்திறனாளி குடும்பத்தினர் குடியிருப்பாக மாற்றி பயன்படுத்தி வந்தனர். தற்போது, மாற்றுத்திறனாளிகள் ஊட்டி ஆதரவற்றோர் மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே சிதிலமடைந்து காணப்பட்ட இந்த கட்டடம் தற்போது முழுமையாக உடைந்து பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்த பகுதியில் விளையாட்டு மற்றும் நடைபயிற்சி செல்பவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படும் முன், இதனை முழுமையாக அகற்றி, மாணவர் விடுதி அருகே புதிய மேடை அமைத்து தர வேண்டும் என, இப்பகுதி விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.