கால்நடை வளர்ப்பிற்கு வேளாண் அந்தஸ்து வழங்க கோரிக்கை
பந்தலுார்; 'தமிழகத்தில் கால்நடை வளர்ப்பிற்கு வேளாண் அந்தஸ்து வழங்கி, கால்நடை வளர்ப்போரை காப்பாற்ற வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டு உள்ளது.தமிழ்நாடு கால்நடை பட்டதாரி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பாலாஜி கூறியதாவது:நம் மாநிலத்தில் பல லட்சம் கால்நடைகள் உள்ளன. தற்போது, ஆவின் மூலம் நாள் ஒன்றுக்கு, 40 லட்சம் லிட்டர் பால் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. 60 சதவீதத்திற்கு அதிகமான பால் தனியார் பால் பண்ணைகள் மூலம் கொள்முதல் செய்யப்படும் நிலையில், ஆவின் மூலம் கால்நடை வளர்ப்பவர்களுக்கு வழங்கும் திட்டங்கள் சென்று சேர்வதில் தடை உள்ளது.தமிழ்நாட்டில், 93 சதவீதம் பேர் சிறு விவசாயிகளாகவும், 55 சதவீதத்திற்கு அதிகமானோர் நிலம் அற்றவர்களாகவும் உள்ளனர்.மகாராஷ்டிரா அரசு சமீபத்தில், 20 ஆயிரம் கறிக்கோழிகள், 50-ஆயிரம் முட்டை கோழிகள், 100 முதல் 500 கால்நடைகளுடன் கூடிய பண்ணைகளை வேளாண் அந்தஸ்துக்கு கொண்டு வந்துள்ளது.அதேபோல், தமிழகத்திலும் கோழி, ஆடு, மாடு மற்றும் பன்றி வளர்க்கும் சிறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், கால்நடை வளர்ப்பிற்கு வேளாண் அந்தஸ்து வழங்கினால் பயனாக இருக்கும்.இதன் மூலம் மானிய விலையில் தரமான தீவனங்களையும், கூட்டுறவு துறை மூலம் பால் உற்பத்தியை அதிகரிக்கவும், அரசு மூலம் வழங்கும் கடன் உதவிகளையும் கால்நடை வளர்ப்பவர்கள் எளிதாக பெற்று பயன்பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.