மண் அரிப்பால் சேதமடையும் சாலை :வாகன போக்குவரத்து பாதிக்கும் ஆபத்து
கூடலூர்: கூடலூர் கோழிப்பாலம் அருகே, மண் அரிப்பால் சாலையோரம் சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. கூடலூர், கோழிக்கோடு சாலை, தமிழக, கேரளா, கர்நாடகாவை இணைக்கும் முக்கிய வழித்தடமாகும். இச்சாலையை உள்ளூர் வாகனங்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா வாகனங்களும் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். கேரளா வயநாடு, மல்லபுரம், திருச்சூர், கோழிக்கோடு சுற்றுலா பயணிகள் இச்சாலை வழியாகவே நீலகிரிக்கு சுற்றுலா வந்து செல்கின்றனர். இச்சாலையில், தமிழக - கேரளா எல்லையான கீழ்நாடுகாணி முதல் கீழ்நாடுகாணி வரையும், செம்பாலா முதல் கூடலூர் பழைய பஸ் ஸ்டாண்ட் வரை சேதமடைந்துள்ளது. இதனை சீரமைக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், கோழிப்பாலம் அருகே, மண் அரிப்பால், சாலையோரம் தொடர்ந்து சேதமடைந்து வருகிறது. அவ்வழியாக செல்லும் கனரக வாகனங்களால், சாலை மேலும், சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அப்பகுதியை சீரமைக்க நடவடிக்கை இல்லாததால் ஓட்டுநர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஓட்டுநர்கள் கூறுகையில், 'அப்பகுதியில், மண் அரிப்பு ஏற்பட்டு, சாலை சேதமடைவதை தடுக்க, இதுவரை நடவடிக்கை இல்லை. இதனால், சாலை மேலும், சேதமடைந்து, போக்குவரத்து பாதிக்கும் சூழல் உள்ளது. எனவே, அதிகாரிகள் அப்பகுதியை ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும்' என்றனர்.