மழையில் சேதமடைந்த சாலை; விரைவில் சீரமைப்பது அவசியம்
கோத்தகிரி,; கோத்தகிரி- ஊட்டி வழித்தடத்தில், மழையில் சேதமடைந்த சாலை சீரமைக்கப்படாமல் உள்ளதால், விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. ஊட்டி- கோத்தகிரி வழித்தடத்தில் போக்கு வரத்து நிறைந்து காணப்படுகிறது. இச்சாலையில், குறிப்பாக, 'கார்ஸ்வுட்' பகுதியில், வானுயர்ந்த கற்பூர மரங்கள் நிறைந்து காணப்பட்டன. மழை நாட்களில் மரங்கள் விழுந்து, போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தற்போது அங்கு பல அபாயகரமான மரங்கள் அகற்றப்பட்டன. இந்நிலையில், கடந்த ஆண்டு பெய்த மழையில், கார்ஸ்வுட் பகுதியில், சாலை ஓரத்தில் இருந்த மரம், வேருடன் பெயர்ந்து விழுந்தன. குறிப்பிட்ட இடத்தில், சாலையின் கீழ் பகுதியில் துண்டிப்பு ஏற்பட்டது. நெடுஞ்சாலைத்துறை சார்பில், தற்காலிகமாக தடுப்பு அமைக்கப்பட்டது. ஆனால், தடுப்புச் சுவர் அமைக்கப்படவில்லை. இதனால், மழை பெய்யும் பட்சத்தில், சாலை துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, போக்குவரத்து நிறைந்த சாலையில், தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.