சாலை பணியை தரமாக மேற்கொள்ள வேண்டும்; பணியை நிறுத்திய மக்கள்
கூடலுார்; முதுமலை, போஸ்பாரா - முதுகுளி சிமென்ட் சாலையை தரமாக மேற்கொள்ள வலியுறுத்தி, மக்கள் பணிகளை நிறுத்தினர்.முதுமலை ஊராட்சிக்கு உட்பட்ட, முதுமலை புலிகள் காப்பகத்தினுள் உள்ள முதுகுளியில் வசிக்கும் மக்கள், போஸ்பாரா- முதுகுளி இடையே உள்ள மண் சாலையை சீரமைக்க தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.தொடர்ந்து, முதலமைச்சரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், 65.22 கோடி ரூபாய் நிதியில் கடந்த மாதம் சிமென்ட் சாலை அமைக்கும் பணி துவங்கப்பட்டது. இந்நிலையில், 'பணி தரமில்லை; பணிகளை தரமாக மேற்கொள்ள வேண்டும்,' என, வலியுறுத்தி, மக்கள் பணிகளை நிறுத்தினர். தற்போது, பெய்து வரும் மழையால், மக்கள் சாலையை பயன்படுத்த முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால், சாலை பணியை தரமாக மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கைக்கு வலியுறுத்தி உள்ளனர். அதிகாரிகள் கூறுகையில், 'சாலை பணிகள் நிறுத்தப்பட்டது தொடர்பாக, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தற்போது பெய்து வரும் மழை நின்ற பின், சாலை பணிகள் துவங்கப்படும்,' என்றனர்.