சாலை ஓரத்தில் மரங்கள்: அகற்றினால் ஆபத்தில்லை
பந்தலுார்: '-பந்தலுார் அருகே எருமாடு செல்லும் சாலை ஓரத்தில், வெட்டி போடப்பட்டுள்ள மரங்களை அகற்ற வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டு உள்ளது. சேரம்பாடியில் இருந்து எருமாடு செல்லும் சாலையில், கையுன்னி அருகே சாலை ஓரத்தில், ஆபத்தான நிலையில் இருந்த மரங்கள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் அடியோடு வெட்டப்பட்டன. வெட்டப்பட்ட மரங்கள் துண்டுகளாகப்பட்டு சாலையின் இரண்டு பக்கங்களிலும் போடப்பட்டுள்ளது. இதனால், வாகனங்கள் வேகமாக வரும் போது, எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விடும் சூழலில் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், சாலை ஓரத்தில் போடப்பட்டுள்ள இந்த மரங்களை, கேரளா மாநிலத்திற்கு கடத்தி செல்லவும் வாய்ப்பு உள்ளது. எனவே, சாலை ஓரத்தில் போடப்பட்டுள்ள மரத்துண்டுகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.