மழையால் பாறைகள் உருண்டு போக்குவரத்து பாதிப்பு
ஊட்டி:மஞ்சூர்-- கோவை சாலையில் பாறைகள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தொடர்வதால் வரும், 2 நாட்களுக்கு நீலகிரி உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு கன மழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டது. நேற்று முன்தினம் முதல் நீலகிரியின் பல்வேறு பகுதிகளை மழை பெய்து வருகிறது. கடும் குளிரான காலநிலை நிலவுகிறது. போக்குவரத்து பாதிப்பு இந்நிலையில், நேற்று காலை, 6:00 மணியளவில், மஞ்சூர்-- கோவை சாலையில் வனப்பகுதியில் உள்ள பெரும்பள்ளம் மலைப்பாதையில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்து கிடந்தன. இதனால், அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவலின் பெயரில், மாநில நெடுஞ்சாலைத்துறை நீலகிரி கோட்ட பொறியாளர் குழந்தை ராஜ் உத்தரவின் பேரில், உதவி கோட்ட பொறியாளர் ராஜா தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து, பொக்லைன் உதவியுடன் பாறைகளை அகற்றினர். பகல், 12:00 மணியளவில் பாறைகள் அனைத்தும் அகற்றப்பட்டு போக்குவரத்து சீரானது.