உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / இஞ்சி விவசாயத்தை பாதிக்கும் வேர் அழுகல் நோய்; தோட்டக்கலைத் துறையினர் ஆய்வு செய்ய முடிவு

இஞ்சி விவசாயத்தை பாதிக்கும் வேர் அழுகல் நோய்; தோட்டக்கலைத் துறையினர் ஆய்வு செய்ய முடிவு

பந்தலுார்; நீலகிரி மாவட்டம், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில், இஞ்சி விவசாயம் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெப்ப மண்டல மற்றும் துணை வெப்பமண்டல பகுதிகளில், மானாவரி பயிராக இஞ்சி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மே மற்றும் ஜூன் மாதங்களில் இதன் நடவு பணி துவக்கப்படும். நடவு செய்து, 9 மாதங்களில் அறுவடைக்கு தயாராகும். நீலகிரியில், இஞ்சி விவசாயத்தில், கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில், இஞ்சி விவசாயத்தில் தற்போது பூஞ்சான நோய் பாதிப்பு ஏற்பட்டு, இதன் இலைகள் மஞ்சள் நிறத்திற்கு மாறி வேர் அழுகல் நோய் ஏற்பட்டு வருகிறது. இதனால், இஞ்சி விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டு, இதனை நம்பி கடன் வாங்கி விவசாயத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் ஜெயலட்சுமி கூறுகையில், ''தற்போது மழை பெய்து வரும் நிலையில், வடிகால் வசதி இல்லாவிட்டாலும் இதுபோன்ற அழுகல் நோய் ஏற்படும். ஆனால், வடிகால் வசதி மற்றும் தண்ணீர் தேங்கி நிற்காத பகுதியில் இதுபோன்று நோய் பாதித்து வருவது குறித்து, நேரில் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய ஆலோசனை வழங்கப்படும்,'' என்றார். விவசாயி ஜோஸ் கூறுகையில், ''அதிக அளவிலான விவசாயிகள் இஞ்சி விவசாயத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ஆண்டிற்கு பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டி தரும் விவசாயமாக இது உள்ளது. தற்போது அனைத்து இஞ்சி விவசாய தோட்டங்களிலும் நோய் பாதித்து உள்ளதால், விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை