மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 39 கோடி கடனுதவி
ஊட்டி; ஊட்டியில், 278 மகளிர் சுய உதவி குழு பயனாளிகளுக்கு, 39 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்பட்டது. மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான மாபெரும் வங்கி கடன் வழங்கும் நிகழ்ச்சி ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடந்தது. அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் பங்கேற்று பயனாளிகளுக்கு கடன் உதவி வழங்கி பேசுகையில், ''இம் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவி குழுவினர் தேயிலை, காபி தோட்டங்களை குத்தகைக்கு எடுத்தல், நீலகிரி தைலம் தயாரித்தல், தேன் எடுத்தல், தையல், எம்பிராய்டரி போன்ற பல்வேறு வாழ்வாதார தொழில்களை தொடங்கி முன்னேற்றம் அடைந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. மாநில அரசின் திட்டங்களை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். இந்நிகழ்ச்சியின் மூலம், 278 மகளிர் சுய உதவி குழு பயனாளிகளுக்கு, 39 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது,'' என்றார். நிகழ்ச்சியில் ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் சிறப்பாக செயல்பட்டு வந்த இரண்டு மகளிர் சுய உதவி குழுவிற்கு சான்றிதழ்வழங்கப்பட்டது. உதவி திட்ட அலுவலர் ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.