உலகில் உணவு அளவு குறைந்து வருகிறது; விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வருத்தம்
ஊட்டி: உலகில் மனிதர்கள் மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும் தேவையான உணவு அளவு குறைந்து வருவதாக, விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது. ஊட்டி எச்.பி.எப்., அரசு மேல்நிலைப் பள்ளியில், தேசிய பசுமை படை சார்பில், உணவும் சுற்றுச்சூழலும் என்ற தலைப்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுகராஜ் தலைமை வகித்தார். பசுமை படை பொறுப்பாசிரியர் பிரீத்தா பேசுகையில் 'இயற்கை வளங்களை பாதுகாப்பதில் மாணவர்களின் பங்கு அதிகமாக இருக்க வேண்டும். அனைத்து ஜீவராசிகளின் இயக்கம் சமநிலையில் இருக்கும் வரை, மனித வாழ்க்கை வளமானதாக நிலைத்து நிற்கும். பள்ளி விடுமுறை நாட்களில், வீடுகளில் மூலிகைத் தோட்டம் அமைத்தல், இயற்கை விவசாயம் போன்ற பயனுள்ள பணிகளை மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும்' என்றார். தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் பேசியதாவது: உலகில் மனிதர்களுக்கு மட்டும் அல்லாமல், வன விலங்குகளுக்கும் தேவையான உணவு அளவு குறைந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம், அவற்றின் வாழ்விடங்களை ஆக்கிரமிப்பதும், பல்லுயிர் சூழல் பகுதிகள் மாசடைந்து வருவதுமே ஆகும். ஓரின சாகுபடி செய்யும் போது, பல ஆயிரம் தாவரங்களில் இருந்து கிடைக்கும் நன்மைகள் கிடைக்காமல் போகிறது. மண் வளத்திற்கு மட்டும் அல்லாமல், சிறு ஜீவராசிகளுக்கும், விலங்குகளுக்கும் உணவு கிடைக்காமல் போகிறது. பறவைகளுக்கான உணவு தேடல் அதிகரிக்க செய்கிறது. ஆரோக்கியமான மனிதர்களின் உடல் வலிமைக்கு தேவையான ஊட்டச்சத்து இயற்கையாக கிடைப்பது, இன்றைய காலகட்டத்தில் அரிதாகிவிட்டது. இயற்கை பாதுகாப்பு, அனைத்து உயிரினங்களின் நீடித்த நிலை தன்மைக்கான அவசியமாக உள்ளது. இவ்வாறு, அவர் பேசினார். இதில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் பங்கேற்றனர். ஆசிரியை வித்யா நன்றி கூறினார்.