கோ - ஆப்டெக்சில் தோடா எம்ப்ராய்டரி போர்வை விற்பனை
ஊட்டி : ஊட்டி கோ - ஆப்டெக்ஸ் நிலையத்தில் முதல் முறையாக 'தோடா எம்ப்ராய்டரி' போர்வைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.தோடரின மக்கள் பாரம்பரியமாக உடுத்தும் ஆடை 'பூத்துக்குளி'. விழா காலங்களிலும் இறுதி சடங்குகளிலும் இந்த பாரம்பரிய ஆடையை உடுத்திக் கொண்டுதான் பங்கேற்க வேண்டும். பருத்தியிலான வெண்ணிற ஆடையில் சிவப்பு, கருப்பு நிற நுாலால், உடலில் பச்சை குத்துவதுபோல, அதே வடிவமைப்பில் பூ வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கும்.பூ வேலைப்பாடுகள் கையால் மட்டுமே செய்யப்படுகிறது. இந்த ஆடைகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். புவியியல் குறியீடு கிடைத்துள்ளதால், இந்த கலையை பாதுகாக்க வழிவகை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஊட்டி சேரிங்கிராஸ் கோ - ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் முதல் முறையாக தோடர் மக்களின் கை வண்ணத்தில் உருவாக்கப்பட்ட எம்ப்ராய்டரி சால்வைகள், மப்ளர்கள், தலையணை உறைகள், மொபைல் உறைகள், அலங்கார விரிப்புகள் விற்பனைக்கு வந்துள்ளது.கோ - ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் அம்சவேணி கூறுகையில், '' தீபாவளி விற்பனை இலக்காக, 75 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக 'தோடா எம்ப்ராய்டரி' போர்வைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. விற்பனையை பொறுத்து பிற மாவட்டத்தில் உள்ள கோ - ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்திலும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.