சந்தன மரம் கடத்தல் வழக்கு; தலைமறைவு குற்றவாளி கைது
ஊட்டி; சந்தன மரம் கடத்தல் வழக்கில் தண்டனை பெற்று தலைமறைவான குற்றவாளியை கேரளாவில் வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மஞ்சூர் குந்தா வனச்சரகத்திற்கு உட்பட்ட கெத்தை வனப்பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள காப்பு காட்டிற்குள் சமூக விரோதிகள் அவ்வப்போது சென்று சந்தன மரங்களை வெட்டி கடத்துகின்றனர். கடந்த 2018ம் ஆண்டு பிப்., 2ம் தேதி கெத்தை வனப்பகுதியில் சந்தன மர வெட்டி கடத்தியதாக, கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த திலீப்,40, என்பவரை கைது செய்தனர். இவ்வழக்கு, ஊட்டி கோர்ட்டில் நடந்து வந்த நிலையில் கடந்த, 2023ம் ஆண்டு ஜூன் 9ம் தேதி திலீப்பிற்கு, 2 ஆண்டு சிறை தண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. குற்றவாளி மேல் முறையீடு செய்ய இரு நாள் கால அவகாசம் வழங்கப்பட்டது. மேல்முறையீடு செய்யாமல் தலைமறைவானர். கோர்ட்டில் ஆஜராகாததால் அவரை பிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்த பிடிவாரன்ட் பிறப்பித்து ஊட்டி நீதித் துறை நடுவர் உத்தரவிட்டார். குற்றவாளியை வனத் துறையினர் தேடி வந்த நிலையில் குற்றவாளி திலீப், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பட்டாம்பியில் உள்ள அவரது வீட்டில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் குந்தா வனத் துறையினர் அங்கு சென்று திலீப்பை, குந்தா வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து, விசாரணை மேற்கொண்டு கைது செய்து சிறையில் அடைத்தனர்.