உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தோட்டக்கலை துறை ஊக்குவித்த திட்டம் தோல்வி வாடிய மலர் சாகுபடி!கடன் பெற்ற சிறு விவசாயிகளின் நிலை பரிதாபம்

தோட்டக்கலை துறை ஊக்குவித்த திட்டம் தோல்வி வாடிய மலர் சாகுபடி!கடன் பெற்ற சிறு விவசாயிகளின் நிலை பரிதாபம்

ஊட்டி:நீலகிரியில் கொய்மலர் சாகுபடியில் விவசாயிகளுக்கு பலத்த அடி விழுந்ததால், உற்பத்தி செய்வதை தவிர்த்து வருகின்றனர்.நீலகிரி மாவட்டத்தில், 20 ஆண்டுகளுக்கு முன்பு, தேயிலைக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்ட காலத்தில், அதற்கு மாற்றாக கொய்மலர் சாகுபடியை மாநில அரசு ஊக்குவித்தது. மாவட்டத்தில், 500க்கும் மேற்பட்ட சிறு, குறு தேயிலை விவசாயிகள், தங்கள் தோட்டங்களின் ஒரு பகுதியை அழித்து, பசுமைக் குடில் அமைத்து, 'ஜெர்பரா, கார்னேஷன், ஆந்துாரியம், லில்லியம்' போன்ற மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, எளிதாக வங்கி கடன்கள் வழங்கப்பட்டன. பசுமைக் குடில் அமைக்க, தோட்டக்கலை துறை சார்பில் மானியமும் வழங்கப்பட்டது.

விற்பனை பிரச்னையால் பாதிப்பு

கடந்த, 2010ம் ஆண்டு வரை ஓரளவு வருமானம் ஈட்டி தந்த மலர் சாகுபடி தொழில், தரமற்ற நாற்று வினியோகம், சந்தை வசதியின்மை உட்பட பல காரணங்களால் வீழ்ச்சியின் பிடியில் சிக்கியது. விவசாயிகளுக்காக, ஊட்டியில் அமைக்கப்பட்ட மலர் ஏற்றுமதி மையமும், ஏற்கனவே மூடப்பட்டது. விவசாயிகள் பலர் தொழிலை கைவிட்டனர்; சொற்ப அளவிலான விவசாயிகள் தொழிலை தொடர்ந்தனர். வங்கியில் பெற்ற கடனை செலுத்த முடியாமல் பலரும் பாதிக்கப்பட்டனர்.இந்நிலையில், மாவட்டத்தில் சில மாதங்களுக்கு முன்பு வீசிய சூறாவளி காற்று, கன மழையால், பல இடங்களில், பசுமை குடில்கள் சேதமடைந்தன. இந்த தொழிலை தொடர முடியாமல், விவசாயிகள் பலர், மலர் சாகுபடியை கைவிட்டனர்.

டோட்டலி அவுட்

துவண்டு போன கொய்மலர் சாகுபடியை துாக்கி நிறுத்த, தோட்டக்கலை துறை சார்பில், தும்மனட்டி அரசுப் பண்ணையில், கார்னேஷன் நர்சரி அமைக்கப்பட்டு, நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டாலும் அதனை வாங்க ஆளில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.இதற்கிடையில், குறைந்த அளவில் மலர் சாகுபடி செய்து வரும் விவசாயிகள், சாகுபடி செய்யப்படும் பூக்களுக்கு உரிய விலை கிடைக்காததால், துவண்டு போயுள்ளனர். தற்போது, ஒரு கொய்மலருக்கு, 4 - 5 ரூபாய் கிடைப்பதால் தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்கவே போதுமானதாக இல்லை என புலம்புகின்றனர்.நீலகிரி மலர் சாகுபடியாளர்கள் சங்க தலைவர் விசுவநாதன் கூறியதாவது, ''ஆரம்ப காலங்களில் கொய்மலர் சாகுபடியில், 500க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டனர். தற்போது, விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு கொய்மலர் சாகுபடி நடந்து வருகிறது. நீலகிரியை பொறுத்த வரை மாற்று சாகுபடியாக கொண்டு வந்த கொய்மலர் தற்போது, 'டோட்டலி' அவுட்டானது. இந்த விவசாயத்தில் ஈடுபட்ட பலர் வங்கியில் வாங்கிய கடனை கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். அரசு இந்த பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

உதவ தயாராக உள்ளோம்...!

நீலகிரி, தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சிபிலா மேரி கூறுகையில்,'' நீலகிரியில் கொய்மலர் சாகுபடியை பொறுத்தவரை தோட்டக்கலை துறை மானியத்துடன் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. விவசாயிகள் போதிய ஒத்துழைப்பு தராததால் கொய்மலர் சாகுபடியில் பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டுள்ளது. முறையாக கையாளாமல் விவசாயிகள் நஷ்டமடையும் சூழல் ஏற்பட்டது. விவசாயிகள் தேவைப்படும் கொய்மலர் நாற்றுகளை எழுதி கொடுத்தால் தோட்டக்கலை துறை மூலம் உற்பத்தி செய்து வழங்க தயாராக உள்ளோம்,'' என்றார்

எதார்த்த நிலையை அறியணும்...

சிறு விவசாயிகள் கூறுகையில், 'நீலகிரியில், மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலை துறை மற்றும் சிறப்புப் பகுதி மேம்பாட்டு திட்டம் உட்பட பல்வேறு துறைகளின் கீழ், விவசாய மேம்பாட்டுக்கு பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதில், கொய்மலர் சாகுபடி விவகாரத்திலும், சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனம் செலுத்தி, விரிவான ஆய்வு நடத்தி, தொழிலின் எதார்த்த நிலையை கண்டறிய வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ