பழங்குடியின மாணவர்களை கவுரவப்படுத்திய பள்ளி நிர்வாகம்
பந்தலுார் ; பந்தலுார் அருகே முதுமலை புலிகள் காப்பக பகுதியில் பென்னை பழங்குடியின கிராமம் அமைந்தள்ளது. இங்கு செயல்படும் ஊராட்சி ஒன்றிய அரசு துவக்க பள்ளியில் முழுமையாக பழங்குடியின மாணவர்கள் படித்து வருகின்றனர்.இதில், இடைநிற்றல் இல்லாமல், 5-ம் வகுப்பு நிறைவு செய்த மாணவர்களை வழி அனுப்பும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் முருகேசன் தலைமை வகித்தார். மாணவர்களுக்கு சால்வை அணிவித்து, உயர்நிலை பள்ளிக்கு தேவையான பொது அறிவு புத்தகங்கள் மற்றும் பரிசுகள் வழங்கி வழி அனுப்பி வைக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் சக மாணவர்கள் மற்றும் பெற்றோர் பங்கேற்றனர். ஆசிரியர் ரோஸ்மேரி நன்றி கூறினார்.