உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  ஊட்டியில் உருவாகிறது அறிவியல் பூங்கா: ரூ. 2 கோடியில் பணிகள் விறு விறு

 ஊட்டியில் உருவாகிறது அறிவியல் பூங்கா: ரூ. 2 கோடியில் பணிகள் விறு விறு

ஊட்டி: ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகே, 2 கோடி ரூபாயில் அறிவியல் பூங்கா அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. சுற்றுலா நகரமான, ஊட்டியில் பல்வேறு பகுதிகளிலும் பூங்காக்கள் உள்ளன. தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, மரவியல் பூங்கா ஆகியன தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வருகின்றனர். தவிர, ஊட்டி நகராட்சி கட்டுப்பாட்டில் ஏராளமான சிறிய பூங்காக்கள் உள்ளன. இந்த பூங்காவிற்கு சுற்றுலா பயணியர் அதிகளவு செல்லவில்லை என்ற போதிலும், உள்ளூர் மக்கள் ஓய்வு எடுக்கவும், நடைபயணம் மேற்கொள்ளவும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பூங்காக்களுக்கு சுற்றுலா பயணியர், உள்ளூர் மக்கள் செல்லும் வகையில் பூங்காக்களை மேம்படுத்த நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, ஊட்டி மத்திய பஸ் ஸ்டாண்டில் உள்ள நகராட்சி பூங்கா அறிவியல் பூங்காவாக மாற்ற, 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பூங்காவை தயார் செய்யும் பணிகள் துவங்கியுள்ளது. அதில், கற்கால மனிதன், இஸ்ரோ ராக்கெட்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன. கட்டுமான பணிகள் முடிந்தவுடன், இங்கு மேலும் பல்வேறு அறிவியல் சார்ந்த படைப்புக்களை வைக்கவும் நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அறிவியல் சார்ந்த பூங்காக்கள் உள்ளன. சர்வதேச சுற்றுலா தலமான ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணியர் வருகை தருவதாலும், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பயன்பெறும் வகையிலும், 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிவியல் பூங்கா அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை