பள்ளியில் காலநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கு
கோத்தகிரி; கோத்தகிரி ஹில்போர்ட் மெட்ரிக் பள்ளியில், காலநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கு மற்றும் மரம் நடும் விழா நடந்தது.பள்ளி முதல்வர் சந்தியா வரவேற்றார். தாளாளர் ரவிக்குமார் தலைமை வகித்தார். ரோட்டரி சங்க கவர்னர் சுரேஷ்பாபு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ஆசிரியர் ராஜூ, சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:காலநிலை மாற்றம் உலகளாவிய பிரச்னை. அதற்கு தீர்வு காண்பதற்காகவே, அசர்பைசான் நாட்டில் உலக சுற்றுச்சூழல் மாநாடு நடந்தது. இந்த நாட்டில், 90 சதவீதம் வருமானம், கச்சா எண்ணெய் ஏற்றுமதி மூலம் கிடைக்கிறது.பெட்ரோலிய பொருட்களை ஏற்றுமதி செய்யும் ஒரு நாடு, காலநிலை மாற்றம் குறித்த உலக மாநாடு நடத்துவது வேடிக்கையாக உள்ளது. அவர்கள், காலநிலை மாற்றத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து உரையாடாமல், தங்கள் வியாபார உத்திகளை பற்றி உரையாடி உள்ளனர் என கூறப்படுகிறது.ஐக்கிய நாடுகள் சபை தான், காலநிலை மாற்றம் குறித்து செயலாற்றி வருகிறது. வளர்ந்த நாடுகளில் இருந்து, ஐக்கிய நாடுகள் சபைக்கு, எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை.அமெரிக்கா அதிபர் டிரம்ப், பாரீஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்து இருப்பது, காலநிலை மாற்ற மீட்டெடுப்பு முயற்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.ஒவ்வொரு தனி மனிதரும் வெளியிடும் கார்பனின் அளவை அளக்கும் வகையில் நவீன தொழில்நுட்பங்கள் உருவாகியுள்ளன. இது, 'கார்பன் காலடித்தடம்' என, அழைக்கப்படுகிறது. வாகன பயன்பாடு குறைப்பு, மின் சிக்கனம், பொது போக்குவரத்து பயன்பாடு, உள்ளூரில் விளையும் உணவு பொருட்களை பயன்படுத்துதல், காற்றோட்டமும் வெளிச்சமும் உள்ள வீடுகள் கட்டுதல் போன்ற செயல்களால் மட்டுமே காலநிலை மாற்றத்தை சந்திக்க முடியும். இவ்வாறு, அவர் பேசினார்.