அனுமதி இல்லாமல் பைல் காலம்ஸ் அமைக்கும் பணி: மக்களின் புகாருக்கு பின் தடுத்து நிறுத்தம்
கோத்தகிரி: கோத்தகிரி ஒரசோலை பகுதியில் அனுமதி இல்லாமல், ‘பைல் காலம்ஸ் பவுண்டேஷன்’ அமைக்கும் நடப்பதை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். நீலகிரி மாவட்டத்தில், பாறைகள் உடைப்பது, ஆழ்த்துளை கிணறு, பைல் பவுண்டேஷன் அமைப்பதற்கு ஐகோர்ட் தடை உள்ளது. இந்நிலையில், கோர்ட் உத்தரவை மீறி, மாவட்டத்தின் பல பகுதிகளில் அனுமதி பெறாமல், இத்தகைய பணிகள் நடந்து வருவது தொடர்கிறது. சிலர் கட்டுமானத்திற்காக, மாவட்ட நிர்வாகத்தில் இருந்து அனுமதி பெற்றதாக, போலியான சான்றை பயன்படுத்தி, இரவு பகல் நேரங்களில் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதனை உறுதிப்படுத்தும் விதமாக, கோத்தகிரி நகராட்சிக்கு உட்பட்ட, ஒரசோலை பகுதியில், பொக்லைன் பயன்படுத்தி, சாலை அமைத்து, நிலம் சமன் செய்யப்பட்டு வருகிறது. மேலும், ஆழ்துளை இயந்திரத்தை பயன்படுத்தி, ‘பைல் காலம்ஸ்’ அமைக்கப்படுகிறது. இதனை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் மவுனம் சாதிப்பதாக, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘கனரக இயந்திரங்கள் இயக்கப்படுவதால் ஏற்படும் அதிர்வு காரணமாக, அப்பகுதியில் உள்ள சாதாரண வீடுகளில் விரிசல் ஏற்படுகிறது. மலை மாவட்டமான நீலகிரியில், கனமழையின் போது பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில், கோத்தகிரி முதலிடத்தில் உள்ளது. ஆனால், கோர்ட் உத்தரவை மீறி, பல இடங்களில் ஆழ்துளை கிணறு அமைப்பது; பைல் காலம்ஸ் போடுவது, பொக்லைன் பயன்படுத்தி மலையை கரைக்கும் செயல்கள் அதிகரித்து வருகின்றன. இதனை அரச அதிகாரிகள் ஆய்வு செய்து தடுத்து நிறுத்தி அபராதம் விதிப்பது அவசர அவசியம்,’ என்றனர். தாசில்தார் மகேந்திரகுமார் கூறுகையில்,‘‘ அப்பகுதியில் பொக்லைன் இயக்க மட்டும் ஐந்து நாட்களுக்கு அனுமதி பெற்றதாக தெரிகிறது. ஆனால், பைல் காலம்ஸ் பவுண்டேஷன் அமைக்க அனுமதி பெறவில்லை. மக்களின் தகவலை அடுத்து, குறிப்பிட்ட இடத்தில், வி.ஏ.ஓ., அனுப்பப்பட்டு பணி நிறுத்தப்பட்டது. கள ஆய்வுக்கு பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’’