ஊட்டி: நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு கோவில்களில், புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. ஊட்டி மாரியம்மன் கோவிலில், புத்தாண்டை முன்னிட்டு நேற்று காலை, 5:00 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. 6:00 மணிக்கு நடந்த வழிபாடுகளில் உள்ளூர் மக்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, 12:00 மணிவரை நடந்த பூஜைகளில் பல்வேறு கிராமங்களில் இருந்து மக்கள் பங்கேற்றனர். மாலை, 4:00 மணிக்கு மேல் இரவு வரை நடந்த சிறப்பு வழிபாடுகளில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. காந்தள் காசி விஸ்வநாதர் கோவிலில், 6:00 மணிக்கு வேள்வி பூஜை நடந்தது. அதன்பின், 6:30 மணிக்கு, 108 சங்காபிேஷகம் நடந்தது. 7:00 மணிக்கு பேரொளி வழிபாடுகள் நடந்தது. அதன்பின், உள்ளூர் மக்களின் நன்மைக்காக, புத்தாண்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவுக்கு வந்த அனைவருக்கும், மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. * ஊட்டி வேலிவியூ மலைப்பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில், காலையில் நடந்த புத்தாண்டு பூஜையில் சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் காட்சி அளித்தார். அதில், லவ்டேல்,வேலிவியூ, கேத்தி, ஊட்டி பகுதி மக்கள் பங்கேற்றனர். பழைய அக்ரஹாரம் ஆஞ்சநேயர் கோவிலில், நேற்று காலை நடந்த பூஜையில் ஆஞ்சநேயர் திருவேங்கடமுடையான் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மார்க்கெட் புதிய அக்ரஹாரம் பகுதியில் வேணுகோபால சுவாமி கோவிலில் காலை, 5:30 மணிக்கு திருப்பாவை பாசுரங்கள் பாடி வழிபாடு நடந்தது. பக்தர்கள் கோவிந்தா கோஷங்களுடன் சுவாமியை வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. * ஊட்டி எச்.பி.எப்., நீலமலை திருப்பதி ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், காலை, 6:00 மணிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. அதன்பின் நடந்த சிறப்பு பூஜைகளில், உள்ளூர் மக்கள் ப ங்கேற்றனர். *குன்னுார் சிவசுப்ர மணிய சுவாமி கோவிலில், பழனி பாத யாத்திரை குழுவினர் புறப்பாடு மற்றும் ஆங்கில புத்தாண்டையொட்டி காலை, 7:00 மணிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. அதில், யாத்திரை குழுவினர், அவர்களின் குடும்பத்தார் திரளாக பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். குன்னுார் மவுண்ட் ரோடு, விநாயகர் கோவிலில், 36வது ஆண்டு அன்னதான பெருவிழா நடந்தது. விழாவையொட்டி காலையில் விநாயகர், முருகன், ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தன; மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அன்னதான பெருவிழாவை குருசாமி பாஸ்கரன் துவக்கி வைத்தார். ஏற்பாடுகளை, ஐயப்ப பக்தர்கள் ராஜன், விஜயகுமார், மணி, வி.ராஜன், செல்வம், முருகன்குட்டி உட்பட பலர் செய்திருந்தனர். *மேல் கூடலுார் சந்தக்கடை மாரியம்மன் கோவிலில், புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள், அதிகாலை முதல் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்தனர். கூடலுார் விநாயகர் கோவில், காலை முதல் இரவு வரை சிறப்பு பூஜைகள் நடந்தது. விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சக்தி முனீஸ்வரன் கோவிலில், காலை முதல் பக்தர்கள் கோவிலுக்கு வந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த முனீஸ்வர சுவாமியை தரிசனம் செய்து சென்றனர். இதேபோன்று, மாவட்டத்தில் உள்ள கிராம கோவில்களிலும், புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.