ஸ்டெர்லிங் பயோடெக் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
ஊட்டி: ஊட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில், 'ஸ்டெர்லிங் பயோடெக்' ஊழியர் சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி, காத்திருப்பு போராட்டம் நடந்தது.ஊட்டியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்தில், பல ஆண்டுகளாக, 100க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்த இந்த நிறுவனத்தை, தற்போது அமெரிக்க நிறுவனம் ஒன்று கையகப்படுத்தியது. ஓராண்டு காலம் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்ட நிலையில், ஆலை மூடலுக்கு பின் ஊதியம் நிறுத்தப்பட்டது.'ஆலை மூடலுக்கு அனுமதி வழங்க கூடாது' என, சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் சார்பில், ஆதாரங்களுடன் மாநில அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. 'தொழிலாளர்களின் நலனுக்கு பாதுகாப்பு இல்லை,' எனக்கூறி, ஆலை மூடலுக்கு தமிழக அரசு அனுமதி மறுத்து, உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊதியம் வழங்க உத்தரவு
அதன்படி, நிலுவையில் உள்ள பண பலன்களை வழங்க வலியுறுத்தி, குன்னுார் தொழிலாளர் உதவி ஆணையர், 'நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊதியத்தை தொழிலாளர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும்,' என, நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்தி, பண பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன், தொழிலாளர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சங்க தலைவர் ஆபிரகாம் தலைமை வகித்தார். பொது செயலாளர் மூர்த்தி மற்றும் பொருளாளர் அன்பரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில், 'தமிழக அரசின் அரசாணை எண்-81 ஐ செயல்படுத்த வேண்டும்; தொழிலாளர் உதவி ஆணையரின் முழு சம்பள உத்தரவை அமல்படுத்த வேண்டும்; ஊழியர்களின் பணி இடம் மாற்றத்தை ரத்து செய்வதுடன், தொழிலாளர்கள் விரோத போக்கை கைவிடவேண்டும்,' என, கோஷம் எழுப்பப்பட்டது. போராட்டத்தில், ஊழியர்களுடன், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பங்கேற்றனர்.