இந்திரா நகரில் துர்நாற்றம் வீசும் குடிநீர்: உள்ளூர் மக்கள் அவதி
பந்தலுார்; நெல்லியாளம் நகராட்சியில் துர்நாற்றம் வீசும் குடிநீர் வினியோகம் செய்வதால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நெல்லியாளம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இந்திரா நகர் கிராமம் அமைந்துள்ளது. இங்கு, 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ள நிலையில், இன்கோநகர் என்ற இடத்தில் அமைந்துள்ள குடிநீர் தொட்டியில் இருந்து, இந்த கிராமத்திற்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த மூன்று நாட்களாக வினியோகம் குடிநீர் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் இந்த கிராம மக்கள் குடிநீரை பயன்படுத்த முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் குழாயில் வரும் தண்ணீரில், விலங்குகளின் முடிகளும் சேர்ந்து வருவதால், தண்ணீரை பயன்படுத்திய கிராமத்து மக்கள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளாகி உள்ளனர். இது குறித்து கிராம மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்த போது, 'குடிநீர் தொட்டியில் பறவை ஒன்று விழுந்து உயிரிழந்தது; அதனை அகற்றி விட்டோம்,' என்றனர். மக்கள் கூறுகையில், 'பறவைக்கு இதுபோன்ற முடிகள் இருக்காது, கிணற்றில் ஏதேனும் வனவிலங்குகள் விழுந்து உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளது. அதனை ஆய்வு செய்ய வேண்டும், ஆனால், தொடர்ந்து குடிநீர் வினியோகம் செய்வதால், மக்கள் தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலையில் அவதிப்படுகின்றனர்,' என்றனர் எனவே, நகராட்சி நிர்வாகம் கிணறை சுத்தப்படுத்தி சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.