சுற்றுச்சூழலை பாதுகாக்க மாணவர்கள் முன் வரணும் பள்ளியில் நடந்த கருத்தரங்கில் அறிவுரை
பந்தலுார்: எருமாடு பெண்கள் அரசு உயர்நிலைப் பள்ளியில், 'சுற்றுச்சூழல் பாதுகாப்பும்; மாணவர்களின் பங்கும்,' எனும் தலைப்பில் பயிற்சி கருத்தரங்கம் நடந்தது.தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் பேசுகையில், ''இன்றைய மாறிவரும் கலாசாரம் மற்றும் நாகரீக மாற்றத்தின் காரணமாக, பழமையான பொருட்கள் அனைத்தும் காணாமல் போய் வருகிறது. அதற்கு மாற்றாக கொண்டு வரப்படும் 'பிளாஸ்டிக்' மற்றும் அதனை சார்ந்த பொருட்கள், மண்ணில் இயற்கை தன்மையை பாதித்து, சுற்றுச்சூழலை பாதிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.இந்த நிலைமாறி இயற்கை விவசாயம் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்காத பொருட்கள் பயன்பாடு போன்றவற்றை, மாணவர்கள் மத்தியில் கொண்டு வர வேண்டும் என்பதற்காக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, ஒவ்வொரு பள்ளியிலும் செயல்படும் பசுமை படை மாணவர்கள் மற்றும் அதன் ஆசிரியர்கள் பசுமையை மீட்டெடுக்க முன் வர வேண்டும்,'' என்றார். தொடர்ந்து, பள்ளி தலைமை ஆசிரியர் ஷீஜா தலைமை வகித்து பேசுகையில், ''சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மாணவர்கள் முக்கிய பங்களிக்க வேண்டும் என்பதற்காக, மாணவர்கள் மூலம் மரக்கன்றுகள் நடவு செய்து அதனை வளர்ப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதேபோல் மண்ணை பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்கவும் அனைவரும் ஒன்றிணை செயல்பட வேண்டும்,'' என்றார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அனிபா நிகழ்ச்சியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். தொடர்ந்து, கலை பொருட்கள் பயிற்சியாளர் சங்கீதா, இயற்கையோடு இணைந்து உருவாக்கிய கலைப் பொருட்களை காட்சிப்படுத்தியதுடன், அதனை எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்தும் மாணவர்களுக்கு விளக்கினார். நிகழ்ச்சியில், முன்னாள் ராணுவ வீரர் மோகன்தாஸ் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். பசுமை படை பொறுப்பாசிரியர் ஸ்ரீலதா நன்றி கூறினார்.