வாழை மரங்களை பாதுகாக்க மானிய விலையில் மூங்கில்
கூடலுார்; கூடலுாரில் நேந்திரன் வாழை மரங்கள், காற்றில் சாயாமல் பாதுகாக்க விவசாயிகளுக்கு, அரசு மானிய விலையில் மூங்கில்கள் வழங்கி வருகிறது.கூடலுார் பகுதியில் உள்ள வயல்களில் முன்பு இருபோகம் நெல் விவசாயம் நடந்தது. ஆனால், கோடையில் ஏற்பட்ட தண்ணீர் பற்றாக்குறையினால் வயல்களில் கோடையில் காய்கறி; பருவ மழை காலத்தில் நெல் விவசாயம் நடந்து வருகிறது. தொழிலாளர் பற்றாக்குறையால் ஏமாற்றி வரும் பருவமழை, அரசு மானியம் வழங்காதது போன்ற காரணங்களால் நெல் விவசாயம் குறைந்து வருகிறது.இதற்கு மாறாக, வயல்களில் நேந்திரன் வாழை விவசாயம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், காற்று மற்றும் பருவமழை காலங்களில் நேந்திரன் வாழை மரங்கள் சாய்ந்து விடுவதை தடுக்க, வாழை மரங்கள் இடையே சவுக்கு மரங்கள் அல்லது முங்கில்களை நடவு செய்து, கயிற்றில் வாழை மரங்களை ஒன்றுடன் ஒன்று இணைத்து கட்டி பாதுகாத்து வருகின்றனர்.இதற்கான மரங்கள் கிடைப்பது சிரமம் என்பதால், மானிய விலையில் மூங்கில்கள் வழங்க விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில், நடப்பு ஆண்டு, தோட்டக்கலை துறை சார்பில், தேசிய விரிவாக்க திட்டம் மூலம், வழை மரங்களை பாதுகாக்க மூங்கில்கள் வழங்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.அதிகாரிகள் கூறுகையில், 'தேசிய வேளாண் விரிவாக்க திட்ட மூலம் கூடலுார் பகுதியில், வாழை விவசாயிகளுக்கு, 50 சதவீத மானியத்தில், 40 எக்டர் அளவில் பயன்படுத்தக்கூடிய, மூங்கில்கள் வழங்கி வருகிறோம்,' என்றனர்.இதனை வரவேற்றுள்ள விவசாயிகள், 'குறிப்பிட்ட அளவில் மட்டும் மூங்கில்கள் வழங்காமல், அனைத்து விவசாயிகளுக்கும் தேவையறிந்து மானிய விலையில் மூங்கில்கள் வழங்க வேண்டும்,' என்றனர்.