டி.ஏ.பி.,க்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் பயன்படுத்தலாம்; நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு அறிவுரை
ஊட்டி : 'டி.ஏ.பி., உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம் வேளாண்மை தரக்கட்டுப்பாடு துறை மற்றும் தனியார் நிறுவனம் சார்பில் கூக்கல்தொரை கிராமத்தில் விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நடந்தது. வேளாண்மை தரக்கட்டுப்பாடு துறை கோவை மண்டல உதவி மேலாளர் சதீஷ் குமார் தலைமை வகித்தார். வேளாண்மை உதவி இயக்குனர் லாவண்யா ஜெயசுதா, மாநில விற்பனை மேலாளர் ஜெயபாலன் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், 'வேளாண்மை தரக்கட்டுப்பாடு துறையின் மூலம் விவசாயிகள் கலப்புரத்திற்கு பதிலாக நேரடி உரங்களை பயன்படுத்திட வேண்டும்; டி.ஏ.பி., உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மைகள்,' குறித்து விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.மேலும், டி.ஏ.பி., உரத்தின் மூலப்பொருட்கள் கிடைக்காததால் அதற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்பிளக்ஸ் உரங்களை பயன்படுத்திட விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. மண் பரிசோதனையின் முக்கியத்துவத்தையும் அதனடிப்படையில் உரங்களை பயிர்களுக்கு பயன்படுத்தவும் வலியுறுத்தப்பட்டது.இயற்கை உரங்களான வேப்பம் புண்ணாக்கு மற்றும் சிட்டி கம்போஸ்ட் உரங்களை பற்றியும் அவற்றை எவ்வாறு மற்ற நேரடி உரங்களோடு பயன்படுத்துவது குறித்தும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. விவசாயிகள் தங்களது சந்தேகங்களை கேட்டு தெரிந்துகொண்டனர்.