உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு வினியோகம் நிறுத்தம்.. தீவிரமாகுது போராட்டம்!

கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு வினியோகம் நிறுத்தம்.. தீவிரமாகுது போராட்டம்!

குன்னுார்; தேயிலை விவசாயிகளின் போராட்டம் தொடர்வதால், தேயிலை வாரியம் நிர்ணயம் செய்த விலையை வழங்காத, 8 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு நஷ்டம் ஏற்படும் அபாயம் உள்ளது.குன்னுாரில் உள்ள 'இன்கோசர்வ்' தலைமையில், செயல்படும் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு அங்கத்தினர்கள் வழங்கும் பசுந்தேயிலையில், தேயிலை துாள் உற்பத்தி செய்யப்படுகிறது.தேயிலை துாள் ஏலத்தின் அடிப்படையில், பசுந்தேயிலைக்கு மாதந்தோறும் படி விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. 'விலை நிர்ணயத்துக்கு குறைவாக அங்கத்தினருக்கு தொகை வழங்க கூடாது,' என, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. எனினும், சில இடங்களில் உரிய விலை வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்கிறது.

நிர்ணய விலை குறைப்பு

அதில், குந்தாவில் உள்ள, 8 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு அக்., மாத நிர்ணய விலையான கிலோவிற்கு, 24.49 ரூபாய் வழங்கப்படாமல், குறைத்து வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அங்கத்தினர்கள் அமைச்சர், அதிகாரிகளிடம் பல தரப்பட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு கிடைக்கவில்லை. இதனால், கூட்டுறவு தொழிற்சாலைகளின் பிரதிநிதிகள்; ஒருங்கிணைப்பு குழுவினர்; விவசாயிகள் கூட்டுறவு தொழிற்சாலைகளுக்கு பசுந்தேயிலை வழங்குவதை நிறுத்த முடிவு செய்து, கடந்த, 4 நாட்களாக பசுந்தேயிலை வழங்குவதை சிறிது, சிறிதாக நிறுத்தி வருகின்றனர்.இதனால், தொழிற்சாலைகள் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டு, பல லட்சம் ரூபாய் வருமானம் இழப்பதுடன், ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கும் அபாயம் உள்ளது.

தொழிற்சாலையை இயக்க முடியாது

குந்தா மேற்குநாடு தேயிலை விவசாயிகள் கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் கூறுகையில், ''ஒரு கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை இயங்க வேண்டுமெனில், குறைந்தபட்சம், 8,000 கிலோ பசுந்தேயிலை வரத்து இருக்க வேண்டும். ஆனால், 24ம் தேதி, பிக்கட்டியில், 500 கிலோ; எடக்காட்டில், 1000 கிலோ ; கிண்ணக்கொரையில் 400 கிலோ ; மேற்கு நாடுவில் 600 கிலோ ; மஞ்சூரில் 1500 கிலோ ; இத்தலாரில் 2500 கிலோ; நஞ்சநாட்டில் 3,800 கிலோ மட்டுமே பசுந்தேயிலை வந்துள்ளது. இதனால், கைகாட்டி தொழிற்சாலைக்கு கொண்டு சென்று உற்பத்தி செய்யபட்டும் பயனில்லை. வரும் நாட்களில் முழு அங்கத்தினர்களும் பசுந்தேயிலை வழங்குவதை நிறுத்த உள்ளனர். இதனால், தொழிற்சாலைகள் இயங்க முடியாத சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது,'' என்றார்.

விலை தராததற்கு காரணம் என்ன?

நாக்கு பெட்டா விவசாயிகள் உற்பத்தியாளர் சங்க முதன்மை நிர்வாகி பாலமுருகன் கூறுகையில்,''கடந்த, 12 ஆண்டுகளாக குறைந்தபட்ச விலையை அங்கத்தினர்களுக்கு கூட்டுறவு தொழிற்சாலைகள் வழங்குவதில்லை. நீலகிரியில் உள்ள கூட்டுறவு தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தேயிலையை விட, அசாம், கூடலுார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாதந்தோறும், 250 டன் தேயிலை துாள் 'இன்கோசர்வ்' பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. சமீபத்தில், மாநில அரசு நபார்டு வங்கி மற்றும் அரசின் ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ், நீலகிரியில் உள்ள கூட்டுறவு தொழிற்சாலைகளை நவீனமயமாக்க, ரூ.68 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கூட்டுறவு தொழிற்சாலைகள் இந்த நிதிக்கான வட்டியை கொடுத்து வரும் நிலையில், அங்கத்தினர்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ