தார் கலவை ஆலை சுவர் இடிந்து குடியிருப்பு சேதம்
பந்தலுார்; பந்தலுார் அருகே தேவாலா பகுதியில் தனியார் தார் கலவை ஆலை, பாதுகாப்பு சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு வீடுகள் சேதமடைந்தன. பந்தலுார் தேவாலா பஜார் பகுதியை ஒட்டி போக்கர் காலனி அமைந்துள்ளது. இங்கு, 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ள நிலையில், இதனை ஒட்டி தனியார் தார் கலவை ஆலை செயல்பட்டு வருகிறது. தார் கலவை ஆலை சுற்றிலும் பாதுகாப்பு சுவர் கட்டப்பட்டுள்ள நிலையில், அதன் உள்பகுதியில் அதிக அளவு ஜல்லிக்கற்கள் கொட்டி வைத்ததால், பாரம் தாங்காமல், நேற்று பகல் பாதுகாப்பு சுவர் இடிந்தது. அதனை ஒட்டி உள்ள உம்மர் மற்றும் சவுகத் ஆகியோரின் வீடுகள் சேதமடைந்தன. வீட்டில் இருந்த இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். தார் கலவை மையத்தை ஒட்டி உள்ள பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், 'சம்பந்தப்பட்ட தார் கலவை ஆலை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என கூறி அப்பகுதி மக்கள் திடீர் முற்றுகையில் ஈடுபட்டனர். அப்பகுதிக்கு கூடலுார் ஆர்.டி.ஓ., குணசேகரன், டி.எஸ்.பி. ஜெயபால், தாசில்தார் முத்துமாரி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதிகாரிகள் கூறுகையில்,'சம்பந்தப்பட்ட தார் கலவை உரிமையாளர், பாதிக்கப்பட்ட குடியிருப்புகளுக்கு மாற்று குடியிருப்பு தற்காலிகமாக ஒதுக்கி தரப்படும். இடிந்த வீடுகளை புதுப்பித்து கட்டி தரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்,' என்றனர். எனினும், 'உரிமையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.