கூடலுார்:கூடலுார் வனக்கோட்டத்தில் ஏற்பட்ட வன ஊழியர்கள் பற்றாக்குறையினால்,சோதனை சாவடி பணியில், தற்காலிக வன ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.கூடலுார் வனக்கோட்டம் ஈட்டி உள்ளிட்ட விலை உயர்ந்த பல அரிய வகை மரங்கள், தாவரங்கள் வளரக்கூடிய பகுதியாகவும், வனவிலங்குகளின் முக்கிய வாழ்விடமாகவும் உள்ளது.இப்பகுதியில் வன குற்றங்களை தடுக்க, தமிழக- கேரளா எல்லைகள் மற்றும் முக்கிய சாலைகளில் எட்டு வன சோதனை சாவடிகள் உள்ளன. இந்த சோதனை சாவடி பணிகளில் வனக்காப்பாளர் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, இப்பகுதிகளில், 16 வனக்காப்பாளர் பணியிடங்களில், 15 பணியிடங்கள் காலியாக உள்ளது.இதனால், பல சோதனை சாவடிகளில், வன குற்றங்களை தடுக்கும் வகையில், கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதற்காக பணியில் அமர்த்தப்பட்டுள்ள தற்காலிக வேட்டை தடுப்பு காவலர்கள், யானை விரட்டும் குழு காவலர்கள் சோதனை சாவடி பணியில் அமர்த்தப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.இவ்வாறு அமர்த்தப்படும் தற்காலிக ஊழியர்களை கடத்தல்காரர்கள், பிற சமூகவிரோதிகள் ஏமாற்றி அல்லது மிரட்டி செல்லும் வாய்ப்புகளும் ஏற்பட்டுள்ளது.வன ஊழியர்கள் கூறுகையில், 'கூடலுார் பகுதியில் வனச்சரகர்கள், வானவர் பணியிடத்தில், ஒரு வனவர் பணியிடம் மட்டும் காலியாக உள்ளது. வனக்காப்பாளர்களின் ஆறு பணியிடங்கள், வன காவலர், 11 பணியிடங்கள் காலியாக உள்ளது. ஆனால், 16 வன சோதனை சாவடி பணிகளில், 15 வனக்காப்பாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது.இதனால், வன சோதனை சாவடி பணியை, தற்காலிக ஊழியர்கள் கூடுதலாக கவனிக்க வேண்டிய உள்ளது. இதனால் பணி சுமை அதிகரித்து மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். எனவே, சோதனை சாவடியில் காலியாக உள்ள வனக்காப்பாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.