தொழில் முனைவோருக்கு தாட்கோ நிறுவனத்தில் மும்மடங்கு திட்டங்கள்! 50 சதவீத மானியத்தில் பயன்பெற மக்களுக்கு அழைப்பு
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் படித்த இளைஞர்கள், பெண்களுக்கான வேலை வாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில், 'தாட்கோ' நிறுவனத்தில் உள்ள மும்மடங்கு திட்டங்களால், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரை தொழில் முனைவோராக மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்த பல்வேறு பொருளாதார மேம்பாட்டு திட்டங்களை வங்கி கடனுதவியுடன் 'தாட்கோ' நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. மாவட்டத்தில் பழங்குடியினருக்கும் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ், வங்கி கடனுதவி வழங்கப்படுகிறது.இந்த திட்டத்தில், மானியம் நீங்கலாக திட்ட தொகையில் மீதமுள்ள தொகை வங்கி கடனாக கிடைக்கும். விண்ணப்பிக்கும் நபர், 18 முதல் 55 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். கல்வி தகுதி அவசியம் இல்லை. முன் அனுபவம் இருந்தால் போதும். நீலகிரி மாவட்டத்தில், வேலை வாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில், படித்த இளைஞர்களை தொழில் முனைவோராக மாற்ற நடவடிக்கை அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. என்னென்ன திட்டங்கள்
அதன்படி, தொழில் முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம் (கிளினிக்), மகளிர் சுய உதவி குழுக்ளுக்கான சுழல்நிதி மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான பொருளாதார கடன் உதவித் திட்டம், நிலம் மேம்படுத்துதல் (இருபாலருக்கும்), இந்திய குடிமைப்பணி முதன்மை தேர்வு எழுது வோருக்கு நிதியுதவி, சட்ட பட்டதாரிகளுக்கு தொழில் துவங்குவதற்கு நிதியுதவி, தமிழ்நாடு தேர்வாணைய தொகுதி-1 முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும்.இத்தகைய பல திட்டங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளில், மாவட்டத்தில், பயனாளிகளுக்கு, 4 கோடி ரூபாய்க்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இன்னும், 2 ஆண்டுகளில், 2000 பயனாளிகள் பல்வேறு திட்டங்கள் மூலம் பயன் பெற அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தொழில் முனைவோராகும் பழங்குடியினர், திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ள மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.நீலகிரி 'தாட்கோ' பொது மேலாளர் செந்தில்செல்வன் கூறுகையில்,''இத்திட்டங்களின் மூலம் பயன்பெற விரும்புவோர் குடும்ப அட்டை, ஜாதிசான்று, வருமான சான்று, ஆதார் அட்டை, கல்வி தகுதி சான்றிதழ் உடன் திட்ட அறிக்கை ஆகியவற்றை சமர்பிக்க வேண்டும். வாகன கடனுக்காக விண்ணப்பிப்பவர்கள் ஓட்டுனர் உரிமம் மற்றும் பேட்ஜ் ஆகிய ஆவணங்களை ஸ்கேன் செய்து http:application.tahdco.comஎன்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்து பயன் பெறலாம். இதன் பலன்களை பெற பழங்குடியினரும் முன் வர வேண்டும்,'' என்றார்.