உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அழகை இழக்கும் டால்பின்நோஸ் காட்சிமுனை: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் பயன்

அழகை இழக்கும் டால்பின்நோஸ் காட்சிமுனை: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் பயன்

குன்னுார்: 'குன்னுாரில் டால்பின் நோஸ் காட்சிமுனையில் அதிகரித்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அப்பகுதியை பொலிவு படுத்த வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது. குன்னுாரில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, டால்பின்நோஸ் காட்சிமுனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்க பர்லியார் ஊராட்சி சார்பில், 'இரு சக்கர வாகனங்களுக்கு, 20 ரூபாய் கார்களுக்கு, 30 ரூபாய், வேன்களுக்கு, 50 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட போதும், போர்டுகள் எதுவும் வைக்காமல் கூடுதலாக வசூல் செய்யப்படுகிறது. இங்குள்ள கழிப்பிடம், நடைபாதை உட்பட அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்ததால், மாவட்ட வன அலுவலர் கவுதம் உத்தரவின் பேரில், 75 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் கடந்த செப்., மாதம், 11ல் துவங்கியது. பணிகள் முடியும் வரை டால்பின்நோஸ் காட்சிமுனை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. எனினும் இதன் சுற்றுப்புற பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிப்பதால் இயற்கை காட்சிகளை சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர். காட்சி முனைப்பகுதியில் தற்போது பணிகள் துரித கதியில் நடந்து வரும் நிலையில், சுற்றுலா பயணிகள் எளிதாக காட்சி முனைக்கு சென்று வரும் வகையில் இங்குள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றவும், வாகனங்கள் காட்சி முனைக்கு சென்று வரும் வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாகன டிரைவர்கள், சுற்றுலா பயணிகள் கூறுகையில், 'வனம், வருவாய், மாநில தேசிய நெடுஞ்சாலை துறையினர், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, வாகனங்கள் எளிதில் சென்று வரவும், நுழைவு கட்டண வசூலில் உள்ள முறைகேடுகளை தடுக்க வேண்டும்,' என்றனர். நெடுஞ்சாலை துறை, வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்,' இப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, வருவாய் துறையிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களும் விரைவில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி