உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அத்துமீறும் தருணம்; கரணம் தப்பினால் மரணம்!

அத்துமீறும் தருணம்; கரணம் தப்பினால் மரணம்!

நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டு தோறும், 35 லட்சம் சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். அதில், தோட்டக்கலை துறை கட்டுப்பாட்டில் உள்ள, அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, தேயிலை பூங்கா, மரவியல் பூங்காக்கள் உள்ளது. மேலும், சுற்றுலா வளர்ச்சி கழக கட்டுப்பாட்டில், தொட்டபெட்டா சிகரம், படகு இல்லம், பைக்காரா ஏரி உள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் பைன் பாரஸ்ட், சூட்டிங் மட்டம், அவலாஞ்சி சூழல் சுற்றுலா, கோடநாடு காட்சி முனை, கூடலுார் ஊசிமலை காட்சி முனை, குன்னுார் பக்காசுரன் மலை, சோலுகார் காட்சிமுனை பகுதிகள் உள்ளன. இவற்றுக்கு சுற்றுலா பயணியர் ஆண்டு முழுவதும் வந்து செல்கின்றனர். அணைப்பகுதிகள் அதிகம் இத்தகைய சுற்றுலா தலங்கள் உள்ள இடங்களில் மின்வாரிய கட்டுப்பாட்டில் சில அணைகள் உள்ளன. குறிப்பாக, அவலாஞ்சி, எமரால்டு, அப்பர்பவானி, பைக்காரா, காமராஜர் சாகர் அணை, பார்சன்ஸ்வேலி உள்ளிட்ட அணைகளை ஒட்டி சூழல் சுற்றுலா மையங்கள் இருப்பதால் இங்கு வரும் சுற்றுலா பயணியர் சிலர் அணை அருகே சென்று, செல்பி, போட்டோ எடுக்கின்றனர். சிலர் அத்துமீறி அணையில் இறங்கி நீரில் விளையாடுகின்றனர். இது போன்று, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மலை சிகரம், சூசைடு பாய்ன்ட் பகுதியில் இளைஞர்கள், அத்துமீறி விபரீத விளையாட்டில் ஈடுபடும் போது உயிர்பலி சம்பவங்களும் அவ்வப்போது நடக்கிறது. மின்வாரியம், வனத்துறையினர் உள்ளூர் போலீசார் உதவியுடன் குறிப்பிட்ட அணை பகுதிகளில் சுற்றுலா பயணியர் அத்துமீறி அணை அருகே செல்வதை தடுக்கும் வகையில், எச்சரிக்கை அறிவிப்பு போர்டு வைத்துள்ளனர். அதையும் மீறி செல்பவர்களை பாதுகாப்பு பணியில் உள்ள சம்மந்தப்பட்ட துறை ஊழியர்கள் எச்சரித்து அனுப்புகின்றனர். எனினும், சீசன் காலங்களில் அத்துமீறல் சம்பவங்கள் தொடர்கின்றன. கூடலுார் கூடலுார் நாடுகாணி -தேவாலா அட்டி சாலையில் உள்ள, 'ஹில் டாப்' மலைப்பகுதியில், யானை மற்றும் பிற வனவிலங்குகள் உலா வருவதால், 'அப்பகுதிக்கு செல்ல வேண்டாம்,' என, வனத்துறையினர் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். எனினும், சில சுற்றுலா பயணிகள், உள்ளூர் இளைஞர்கள் சிலர் அவ்வப்போது மலைக்கு சென்று வருகின்றனர். மேலும்,கூடலுார் ஊசிமலை காட்சி முனைக்கு ஏராளமான சுற்றுலா பயணியர் சென்று வருகின்றனர். 'பாறைகள் நிறைந்த ஆபத்தான பகுதிகளுக்கு, செல்ல வேண்டாம்,' என, தடை உள்ள நிலையிலும், சிலர் அப்பகுதிகளுக்கு செல்கின்றனர். சில மாதங்களுக்கு முன், தடை செய்யப்பட்ட பாறை பகுதிக்கு சென்ற கேரளாவை சேர்ந்த மூன்று சுற்றுலா பயணியர், கல் எறிந்து தேன் கூட்டை கலைத்தனர். தேனீக்கள், அவர்களை துரத்தி கொட்டியதில் ஒருவர் உயிரிழந்தார், இருவர் காயங்களுடன் உயிர் தப்பினர். அதேபோன்று, முதுமலை, மசினகுடி வழியாக பயணிக்கும் சுற்றுலா பயணியர் சாலையோரம் உள்ள ஆற்றில் இறங்கி விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவர்களுக்கு வனத்துறை அபராதம் விதித்தும் விதிமீறல் தொடர்கிறது. குன்னுார் குன்னுார்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் 'லாஸ்பால்ஸ்' உட்பட பல நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை எளிதில் ஈர்ப்பதால் பலரும் அப்பகுதிக்கு போட்டோ எடுக்க சென்று சில நேரங்களில் நீரில் இறங்கி விடுகின்றனர். மேலும், குன்னுார் கோட்டக்கல் பகுதியில் இருந்து, 2 கி.மீ தொலைவில் உள்ள செங்குட்ராயன் மலை பகுதிக்கு செல்ல வனத்துறை தடை விதித்தும், சில 'யூடியூபர்களால்' இப்பகுதி பிரபலப்படுத்தப்பட்டு, சுற்றுலா பயணிகள் குறிப்பாக இளைஞர்கள் அதிக அளவில் வருகின்ற னர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் தர்மபுரி மற்றும் சென்னையை சேர்ந்த ஏழு பேர் கொண்ட சுற்றுலா பயணியரை தேனீக்கள் கொட்டியதால் பலரும் காயமடைந்தனர். இதே போல, கடந்த, 2023 ஆக., மாதம் ஆர்செடின் பகுதியில் உள்ள 'எக்கோராக்' பகுதிக்கு நண்பர்களுடன் சென்ற குன்னுார் மாணவன் அப்துல் ஆசிக், ஆயிரம் அடி பள்ளத்தில் தவறி விழுந்து பரிதாபமாக பலியானார். மேலும், லேம்ஸ்ராக், டால்பின் நோஸ் போன்ற பகுதிகளில் ஆபத்தை அறியாமல் சுற்றுலா பயணிகள் ஆபத்தான பகுதிகளுக்கு சென்று, செல்பி மற்றும் புகைப்படம் எடுப்பது தொடர்கிறது. கடந்த ஓராண்டிற்கு முன்பு டால்பின் நோஸ் காட்சி முனை வேலியை தாண்டி சென்ற ஆந்திர மாநில ஐ.டி.,ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். குன்னுார் ரேலியா அணை பகுதியில், தடுப்புகள் அமைத்த போதும் சுற்றுலா பயணியர் செல்வதும் தொடர்கிறது. பந்தலுார் பந்தலுாரில் உயரமான மலைகளான, குரூஸ் மலை மற்றும் சாமியார் மலை ஆகிய இடங்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் சென்று வருவதற்கு அனுமதி உள்ளது. இந்த பகுதிகளில் வனவிலங்குகள் அதிக அளவில் இருப்பதால் வனத்துறையினர் மட்டுமே அவ்வப்போது கண்காணிப்பு பணிக்காக சென்று வருவருகின்றனர். சில நேரங்களில் பயணிகள்; உள்ளூர் மக்கள் சென்றால், அவர்களுக்கு அறிவுரை கூறி, அனுப்பி விடுகின்றனர். மேலும், சாலை ஓரங்களில் மழை காலங்களில் அதிக அளவில் அருவிகள் உருவாகும் நிலையில், ஆபத்தை உணராமல் வனத்துக்குள் செல்லும் சுற்றுலா பயணிகளால் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. கோத்தகிரி கோத்தகிரி பகுதியில் கோடநாடு காட்சி முனை கோத்தகிரியில் இருந்து, 18 கி.மீ., தொலைவிலும்; கேத்ரின் நீர்வீழ்ச்சி, 6 கி.மீ., தொலைவிலும் அமைந்துள்ளன. இதே போல, சுற்றுலா வரைபடத்தில் இடம்பெறாத, உயிலட்டி நீர்வீழ்ச்சியும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இப்பகுதிகளில் வனத்துறை சார்பில், தடுப்பு வேலிகள் அமைத்தும் சுற்றுலா பயணிகள் வேலியை தாண்டி செல்வது தொடர்கதையாக உள்ளது. இதனால், பாசிப்படர்ந்த நீர்வீழ்ச்சியில் வழுக்கி மூழ்கி பலர் இறந்துள்ளனர். இதை தவிர, மது போதையில் பாட்டில்களை உடைத்தும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வீசியும் செல்வதால், வன விலங்குகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஆபத்து அதிகமாக உள்ளது. எதிர்காலத்தில் இங்கு உயிரிழப்புகளை தடுக்கவும், சுற்றுச்சூழலை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுப்பது அவசியம் மாவட்ட வன அலுவலர் கவுதம் கூறுகையில், ''வனத்துறை சார்பில் சூழல் சுற்றுலா மையங்களில் சுற்றுலா பயணியரின் வருகையை கருத்தில் கொண்டு தேவையான பாது காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, அணை அருகே சென்று அத்துமீறும் செயலில் ஈடுபடுபவர்களை வனத்துறை ஊழியர்கள் கண்காணித்து எச்சரித்து வருகின்றனர். சுற்றுலா பயணியரின் பார்வை படும் வகையில் ஆங்காங்கே அறிவிப்பு போர்டும் வைக்கப்பட்டுள்ளது. இதையும் மீறி அத்துமீறுபவர்களை வனத்துறையினர் கண்காணித்து எச்சரித்து வருகின்றனர்,'' என்றார்.

'ரீல்ஸ்' மோகத்தால் சிக்கல்

பந்தலுார் சமூக ஆர்வலர் சுரேஷ் ''நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் ஆபத்தை ஏற்படுத்தும் இடங்களாகவே உள்ளன. இன்றைய இளைய தலைமுறை ரீல்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தங்களது சாகசங்களை அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காக ஆபத்தையும் மீறி தடை செய்யப்பட்ட இடங்களுக்கு செல்வது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க போதிய விழிப்புணர்வு ஏற் படுத்த வேண்டும்.

அபராதம் விதிக்கப்படுகிறது

குன்னுார் வனச்சரகர் ரவீந்திரநாத் கூறுகையில், ''டால்பின் நோஸ் பகுதிகளில் ஆபத்தான இடங் களுக்கு சுற்றுலா பயணிகள் சென்றால் உடனடியாக பணியாளர்கள் அவர்களை தடுக்கின்றனர். எக்கோராக், பக்காசூரன் மலை உள்ளிட்ட மலைப் பகுதிகளில் தடையை மீறி செல்லும் சுற்றுலா பயணி களுக்கு 500 முதல் 1000 ரூபாய் வரை அபராதம் விதிக் கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,''என்றார்.

'செல்பி' எடுப்பதால் விபரீதம்

ஓய்வு பெற்ற தீயணைப்பு துறை அலுவலர் மோகன் கூறுகையில், ''நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் உயரமான மலைப்பகுதிகளில் சென்று புகைப்படம் மற்றும் செல்பி எடுக்கும் மோகத்தில் தவறி விழ வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. ''குறிப்பாக மழைகாலத்தில் பாறைகளில் இருந்து வழுக்கி விழும் நிலை உள்ளது. இந்தப் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அறியாமலும் செல்கின்றனர். இதற்கு தீர்வு காண ஆபத்தான பகுதிகளில் தடுப்பு வேலிகள், அறிவிப்பு பலகைகள் வைப்பதுடன், 'ரெட்லைன்' அமைப்பது அவசியம்,'' என்றார்.

அத்துமீறினால் போலீசில் புகார்

குந்தா மின்வட்ட மேற்பார்வை செயற்பொறியாளர் பிரேம் குமார் கூறுகையில், '' குந்தா மின் வட்டத்தை பொறுத்த வரையில் அவலாஞ்சி, எமரால்டு அணை பகுதி வழியாக செல்பவர்கள் அணை அருகே செல்பி, போட்டோ எடுத்து செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இப்படி வருபவர்கள் திடீரென அணை அருகே சென்று விபரீத விளையாட்டுகளிலும் சில நேரங்களில் ஈடுபடுகின்றனர். மின்வாரியம் உள்ளூர் போலீசார் உதவியுடன் எச்சரிக்கை அறிவிப்பு போர்டும் வைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணியர் அத்துமீறலில் ஈடுபடுவது தெரியவந்தால் உடனடியாக உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, '' என்றார்.

இதுவரை எட்டு பேர் பலி

கூக்கல்தொரை பகுதி சமூக ஆர்வலர் டட்லி கூறுகையில், ''கோத்தகிரியில் இருந்து, கூக்கல்தொரை சாலையில் உள்ள உயிலட்டி நீர்வீழ்ச்சி. மிகவும் ரம்மியமாக காணப்படும். வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காக, இளைஞர்கள் செல்வது வழக்கம். ''இதுவரை நீர்வீழ்ச்சியில் மூழ்கி எட்டு பேர் வரை உயிரிழந்துள்ளனர். 'நீர்வீழ்ச்சி பகுதிக்கு செல்லக்கூடாது,' என வனத்துறை எச்சரிக்கை பலகை வைத்தும், குளிப்பவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. மழை பெய்யும் நாட்களில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்வீழ்ச்சி, ஆபத்து நிறைந்து காணப்படுகிறது. இங்கு செல்ல நிரந்தர தடை விதிக்க வேண்டும்,'' என்றார்.

விதிமீறினால் அபராதம் விதிக்கணும்

தாந்தநாடு கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யாசாமி கூறுகையில், '' மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா மையமாக விளங்கும் கேத்தரின் நீர்வீழ்ச்சியின் அழகை, ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்கின்றனர். ''நீர்வீழ்ச்சி பகுதி, அபாயகரமானது என வனத்துறை எச்சரிக்கை பலகை வைத்துள்ளது. இருப்பினும், மீறி செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ''கடந்த காலங்களில் சுற்றுலா வந்த கல்லூரி மாணவர்கள், நீர்வீழ்ச்சியில் குளிக்கும் போது மூழ்கி இறந்த சம்பவம் நடந்துள்ளது. குறிப்பாக, மதுபோதையில் அத்துமீறல் சம்பவம் அதிகமாக நடக்கிறது. அங்கு அத்துமீறி செல்பவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

எல்லைகளில் விழிப்புணர்வு அவசியம்

கூடலுார் தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கர் கூறுகையில், '' நீலகிரி மலைகள் நிறைந்த பகுதி என்பதால், ஆபத்தான பகுதிகள் கண்டறியப்பட்டு அரசுத்துறை சார்பில் எச்சரிக்கை பலகைகள் வைத்து கண்காணித்து வருகின்றனர். ''எனினும்,சில சுற்றுலா பயணிகள் சிலர், எச்சரிக்கை மீறி ஆபத்தான மலைப்பகுதிகள், வெள்ள பெருக்கு ஏற்படக்கூடிய நீர்நிலைகள், ஆறுகளுக்கு சென்று, ஆபத்தில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் ஏற்படுகிறது. உயிரிழப்பால் அந்த குடும்பம் பாதிக்கப்படுகிறது. இதனை பயணிகள் அறிய எல்லைகளில் விழிப்புணர்வு அறிவிப்புகள் வைக்க வேண்டும்,'' என்றார். -நிருபர் குழு-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை