உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நீலகிரியில் தொடரும் பருவ மழையால் குடிநீர் வினியோகத்தில் பாதிப்பு! மாசு கலந்து வரும் நீரால் மக்களுக்கு நோய் அபாயம்

நீலகிரியில் தொடரும் பருவ மழையால் குடிநீர் வினியோகத்தில் பாதிப்பு! மாசு கலந்து வரும் நீரால் மக்களுக்கு நோய் அபாயம்

ஊட்டி : நீலகிரியில் தொடரும் பருவ மழையால் குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளதுடன், சில இடங்களில் மாசு கலந்து கலங்கலாக வரும் குடிநீரை மக்கள் பயன்படுத்துவதால் மக்களுக்கு நோய் அபாயம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில், 'ஊட்டி, குன்னுார், கூடலுார் மற்றும் நெல்லியாளம் ஆகிய நான்கு நகராட்சி; 11 பேரூராட்சி; 35 கிராம ஊராட்சி,' என, உள்ளாட்சி அமைப்புகளின் கீழ், 2.25 லட்சம் குடும்பங்கள் உள்ளன. இவரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, அந்தந்த பகுதியில் உள்ள தடுப்பணைகளிலிருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு தொட்டிகளில் சேமிக்கப்பட்டு வினியோகிக்கப்படுகிறது. தவிர,மாவட்ட முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ், 450 கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது. கிணற்று நீரும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் உள்ள பெரும்பாலான தடுப்பணைகள் அனைத்தும் பராமரிக்காமல் விட்டதால் சேறும், சகதியும் நிறைந்து தண்ணீரை சேமிக்க முடியாத நிலையால் குடிநீர் வீணாகிறது. முழுமையாக துார்வார நடவடிக்கை எடுக்கப்படாததால் கோடையில் தண்ணீர் பஞ்சம் ஏற்படுகிறது. சில உள்ளாட்சிகளில் கோடையின் போது, தண்ணீருக்காக மக்கள் ஊற்று நீரை தேடி அலைய வேண்டிய நிலையும் உள்ளது. லாரிகளில் குடிநீர் வினியோகத்திற்கு ஏற்பாடு செய்தாலும் முழுமையாக தண்ணீர் கிடைப்பதில்லை.மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் உள்ள தடுப்பணைகள், கிணறுகளை முழுமையாக துார் வாரி சுத்திகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

வினியோகத்தில் தடை

இந்நிலையில், கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவ மழை மாவட்ட முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. மழையால் அணை, தடுப்பணைகளை சுற்றியுள்ள நீரோடைகளில் நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. தொட்டிகளில் சேகரிக்கப்பட்டு பொது குழாய்களுக்கு வினியோகிக்கப்படும் தண்ணீர் மாசு கலந்து கலங்கலாக உள்ளது. இதனால், மக்களுக்கு நோய் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஊட்டியில் முக்கிய குடிநீர் ஆதாரமான பார்சன்ஸ் வேலி குடிநீரை வினியோகிப்பதில் ஒரு வாரமாக தடை ஏற்பட்டது. இதனால், பெரும்பாலான வார்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பிற உள்ளாட்சிகளிலும் இதே நிலைதான் ஏற்பட்டுள்ளது.

குளோரின் கலக்க அறிவுரை

'குடிநீர் மாசுபடுவதை தவிர்க்க,அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள மேல்நிலை தொட்டிகளில் குளோரின் கலந்து தண்ணீர் வினியோகிக்க வேண்டும்,' என, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பருவ மழையின் போது மின் கம்பங்கள் சேதம், குடிநீர் குழாய் உடைப்பு, தடுப்பணைகள் பராமரிக்காமல் விட்டது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இது போன்ற சிரமங்களை தடுக்க அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மக்களுக்கு தடை இல்லாமல் தண்ணீர் வரும்.

இருமல் பரிசோதனை அவசியம்...

ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை டீன் கீதாஞ்சலி கூறுகையில்,''பருவ மழை தொடர்வதால் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும். தொடர் இருமல், ஜலதோஷம் இருந்தால் உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ