வயல் வெளியான வழி: நாளும் தடுமாறும் பயணம்
பந்தலுார்; பந்தலுார் பஜாரை ஒட்டிய நத்தம் கிராம சாலையில், மழைநீர் வழிந்தோட கால்வாய் அமைக்காததால் மக்கள் தடுமாறி விழும் நிலை உள்ளது. பந்தலுார் பஜாரை ஒட்டி, நெல்லியாளம் நகராட்சியின், 15-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் நத்தம் கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ள நிலையில், கிராமத்திற்கு செல்லும் மண் சாலையில் சில அடி துாரம் மட்டும் சிமென்ட் சாலையாக மாற்றம் செய்யப்பட்டது. மீதமுள்ள பகுதி நகராட்சி நிர்வாகத்தால் கடந்த, 50 ஆண்டுகளுக்கு மேலாக கண்டுகொள்ளாமல் விடப்பட்டுள்ள நிலையில் உள்ளது. இதனால், மழை காலங்களில் சேற்றில் நடக்க முடியாமல் மக்கள் சொந்த செலவில், செங்கல் கற்கள் வாங்கி அடுக்கி வைத்து, அதன் மீது அடிவைத்து அடியாக நடந்து செல்கின்றனர். வயது முதிர்ந்தவர்கள் மற்றும் குழந்தைகள் தடுமாறி கீழே விழுந்து, காயங்களுடன் நடந்து செல்லும் அவலமும் தொடர்கிறது. இந்த பகுதியில் வெற்றி பெறும் கவுன்சிலர்கள், உடனடியாக சாலையை சீரமைத்து தருவதாக பலமுறை வாக்குறுதி கொடுத்தும், மக்கள் போராட்டங்கள் நடத்தியும் பயனில்லை. பந்தலுார் பஜார் மற்றும் நகராட்சி அலுவலகம் அருகே கிராமத்திற்கு செல்லும் சாலையின் ஒரு பகுதியில் தண்ணீர் வழிந்து ஓட கால்வாய் இல்லாமல், தேங்கி நின்று சேறும் சகதியமாக மாறி உள்ளது. மறுபக்கம் சாலை சீரமைக்காமல் தட்டு தடுமாறி மக்கள் நடந்து செல்லும் அவலம் ஏற்பட்டு உள்ளது. இதனால் நொந்து போன மக்கள் வரும் தேர்தலில், தங்கள் கிராமத்திற்கு யாரேனும் ஓட்டு கேட்டு வந்தால் அவர்களை சிறைபிடிக்க முடிவு செய்துள்ளனர். எனவே, இப்பகுதி மக்கள் நடந்து செல்ல ஏதுவாக சாலையை சீரமைத்து தரவும், மழைநீர் தேங்கி நிற்காமல் செல்ல கால்வாய் வசதி ஏற்படுத்தி தர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.