மருத்துவ கல்லுாரியில் ரூ.27.50 கோடியில் நடக்கும் பணிகள்; நான்கு மாதத்தில் முடியும் மாநில சட்டசபை பொதுக்கணக்கு குழு தலைவர் தகவல்
ஊட்டி; ''ஊட்டி மருத்துவமனை மருத்துவ கல்லுாரியில், 27.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வரும் குடிநீர் வசதிகளுக்கான பணி, நான்கு மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்,' என, சட்டசபை பொது கணக்கு குழு உறுதி அளித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில், மாநில சட்டசபை பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில், கலெக்டர் லட்சுமி பவ்யா முன்னிலையில், பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்து வருகிறது. நேற்று காலை, ஊட்டி அரசு மருத்துவகல்லுாரிமருத்துவமனையில் சி.டி., ஸ்கேன் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை ஆய்வு செய்து, கல்லுாரி மாணவர்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தனர். ஊட்டியில், செவித்திறன் குறை உடையோருக்கான, அரசு உயர்நிலைப் பள்ளியை நேரில் பார்வையிட்டு, 17 மாணவர்களுக்கு ஸ்வெட்டர், நோட்டுகள் வழங்கினர். ஆய்வுக்கு பின், குழு தலைவர் செல்வபெருந்தகை நிருபர்களிடம் கூறுகையில்,''சட்டசபை, 2024--26ம் ஆண்டிற்கான பொது கணக்கு குழு, மாவட்ட கலெக்டருடன் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து வருகிறது. மலை மாவட்டத்தில் முன் மாதிரியான மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை அமைக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. மருத்துவமனை திறப்பு விழாவின்போது, குடிநீர் வசதி வேண்டி மாணவர்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி, மாநில முதல்வர், 27.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் வசதியை பூர்த்தி செய்ய நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். நான்கு மாதத்திற்குள் பணி முடிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மாணவர்கள், 'பாராமெடிக்கல் வகுப்பு, செவிலியர் வகுப்பு மற்றும் விளையாட்டு திடல்,' தேவை என, கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கைகள் அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.