உலகம் வன விலங்குகளின் வீடும் கூட...! வனச்சூழலின் செழிப்பு நம் வாழ்வின் பாதுகாப்பு
கூடலுார் : 'மனிதன் இல்லாமல் வன உயிரினங்கள் வாழும்; வன உயிரினங்கள் இல்லாமல் மனிதன் வாழ முடியாது என்பது இயற்கையின் நியதி,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலியை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலான, பிரான்சிஸ் என்பவரின் நினைவு நாளை குறிப்பிடும் வகையில், 1931ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும், அக், 4ம் தேதி, உலக வன விலங்குகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டு நடந்த வன விலங்குகள் தினத்தில், 'உலகம் இவைகளின் வீடு கூட' என்ற கருத்து வன விலங்குளை மையப்படுத்தி வலியுறுத்தப்பட்டு, நாடு முழுவதும் வன விலங்கு வார விழா நடந்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக, நம் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும், வன விலங்கு வார விழாவை நடத்தி, மாணவர்களின் மத்தியில், வனம்; வன உயிரினங்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.அதில், 56 சதவீதம் வனப்பகுதிகளை கொண்டுள்ள, நீலகிரி மாவட்டம், வனவிலங்குகளின் முக்கிய வாழ்விடமாக உள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்தை மையமாக கொண்டு, அதனை ஒட்டிய மசினகுடி, கூடலுார் மற்றும் நீலகிரி வனக்கோட்டங்கள் பிரிக்கப்பட்டு, நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தை காக்கும் பணிகள் நடந்து வருகின்றன. முதுமலை மற்றும் அதனை ஒட்டிய வனக்கோட்டங்களில், யானை, புலி, சிறுத்தை கரடி, காட்டெருமை, யானை, மான்கள், குரங்குகள், ஊர்வன வகைகள், இரு வாழ்விகள் மற்றும் அழிவின் விளிம்பில் உள்ள, கழுதைப்புலி, பாறு கழுகுகள், சிங்கவால் குரங்கு உள்ளிட்ட பல வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இவற்றின் பாதுகாப்பு மற்றும் வேட்டையை தடுக்க, 24 மணிநேரமும், வேட்டை தடுப்பு காவலர்களை கொண்டு கண்காணிப்பு நடந்து வருகிறது. மூன்று மாநில சந்திப்பு முதுமலை
மேலும், முதுமலையை ஒட்டி, கூடலுார் வனக்கோட்டம்; கர்நாடக, கேரளா, முத்தங்கா வன சரணாலயம்; கர்நாடகா பந்திப்பூர் புலிகள் காப்பகம்; சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் உள்ளன. இதனால், நீலகிரி வனக்கோட்டத்தில் உள்ள, யானை உள்ளிட்ட விலங்குகள் சீசன் காலங்கள் உணவு, குடிநீர் தேவைக்காக பிற மாநில வனப்பகுதிகளுக்கு செல்ல முதுமலை சந்திப்பு, முக்கிய வழிதடமாக கொண்டுள்ளது. இதன் காரணமாக, முதுமலை சுற்றுப்புற பகுதிகளில் உள்ள வனச்சூழலை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் மாவட்ட மக்களுக்கு உள்ளது. வனத்தை பாதுகாக்கும் விலங்குகள்
வன விலங்கு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர் ராபர்ட் கூறுகையில், ''வனம்: வனவிலங்குகளை பாதுகாப்பதன் மூலம், நமக்கு தேவையான சுகாதாரமான காற்று, தண்ணீர் கிடைக்கும். இவைகள் அழிக்கப்படுவதால், சூழல் மாறுபட்டு, மக்கள் பாதிப்புகளை சந்திக்கும் ஆபத்து உள்ளது. நம் பாதுகாப்புக்கு வனம் அவசியம்; வனத்தை பாதுகாக்க விலங்குகள் அவசியம் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். அனைத்து உயிரினங்களின் 'உணவு சங்கிலி' என்பது, வனத்தில் யானை, புலி உட்பட பல விலங்கினங்களிடம் இருந்து தான் துவங்குகிறது. 'மனிதன் இல்லாமல் வன உயிரினங்கள் வாழும்; வன உயிரினங்கள் இல்லாமல் மனிதன் வாழ முடியாது,' என்ற இயற்கையின் நியதியை, புரிந்து கொண்டு அவற்றை பாதுகாக்க, நாம் உறுதி ஏற்க வேண்டும்,'' என்றார்.