பஸ் ஸ்டாண்ட் சாலையில் தெரு நாய்கள் அதிகம்
கோத்தகிரி; கோத்தகிரி பஸ் ஸ்டாண்டில் கால்நடைகளுடன், தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதால், போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது. கோத்தகிரி பஸ் ஸ்டாண்டில், அரசு பஸ்கள் உட்பட, இதர வாகன போக்குவரத்துடன், அன்றாட தேவைகளுக்காக வந்து செல்லும் பொதுமக்களின் நடமாட்டமும் அதிகமாக உள்ளது. சமீப காலமாக, கால்நடைகள் மற்றும் தெரு நாய்கள் சாலையில் உலா வருவது தொடர்கிறது. இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. சில நேரங்களில், தெரு நாய்கள் கால்நடைகளை துரத்துவதால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து, பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன்பு, கால்நடைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதுடன், தெரு நாய்களுக்கு கருத்தடை செய்ய, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.