கிராமத்தில் போதுமான கட்டட வசதி இல்லை - தற்காலிகமாக மூடப்பட்ட பழங்குடியினர் அரசு பள்ளி
பந்தலுார்,; முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட, பென்னை பழங்குடியின கிராமத்தில், பழங்குடியினர் மற்றும் மவுண்ட்டாடன் செட்டி மாணவர்கள் பயன்பெறும் வகையில், 1996 ஆம் ஆண்டு, வனத்திற்கு மத்தியில் அரசு துவக்க பள்ளி செயல்பட ஆரம்பித்தது.தொடர்ந்து, இப்பகுதி மக்கள் மாற்றிட திட்டத்தின் கீழ் வெளியேற்றப்பட்ட நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த பள்ளி நிரந்தரமாக மூடப்பட்டது. இதற்கு பதிலாக, பழங்குடியின மக்கள் குடியமர்த்தப்பட்ட பகுதியில், 2021 ஆம் ஆண்டு பழங்குடியின பயனாளிகளான மாறன் மற்றும் பிந்து ஆகியோர் தங்களின் தொகுப்பு வீடுகளை அரசு பள்ளி செயல்பட ஒதுக்கி கொடுத்தனர்.அன்று முதல் பள்ளி சிறப்பாக செயல்பட்ட நிலையில், பென்னை, பாலாபள்ளி, கரும்பன்மூலா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் இந்த பள்ளியில் படித்து வந்தனர். இந்நிலையில், ஸ்ரீராம் நிறுவனம் சார்பில், 4 கோடி ரூபாய் மதிப்பில் 'ஹை டெக் பள்ளி' கட்டடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது.இதற்கு, அப்பகுதியில் வாழும் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மாணவர்களுக்கு படிக்க போதிய வகுப்பறை இல்லாத நிலை ஏற்பட்டது.மாவட்ட கல்வி அலுவலர் பார்த்தசாரதி, வட்டார கல்வி அலுவலர் வாசுகி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். இந்நிலையில், பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டு, நடப்பு கல்வி ஆண்டில், 1 முதல் 5-ம் வகுப்பு வரை படித்த, 23 மாணவர்களில், 16 பேர் அருகில் உள்ள பாட்டவயல் அரசு பள்ளியிலும் ஏழு பேர் முதிரக்கொல்லி அரசுப் பள்ளியிலும் சேர்க்கப்பட்டனர். பள்ளி தலைமை ஆசிரியர் வேறு பள்ளிக்கு கூடுதல் பொறுப்பு ஆசிரியராக நியமிக்கப்பட்டு உள்ளார்.அப்பகுதி மக்கள் கூறுகையில், ' இப்பகுதியில் ஏற்கனவே பழங்குடியின மாணவர்கள் மத்தியில் பள்ளி இடைநிற்றல் அதிகரித்து வரும் சூழலில், இங்குள்ள பள்ளி கட்டடம் தற்காலிகமாக மூடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், இடைநிற்றல் அதிகமாக வாய்ப்புள்ளது. எனவே, இதே பகுதியில் நிரந்தர பள்ளி கட்டடம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.