கிராமத்தில் அச்சுறுத்தி வந்த புலி; வனத்துறை கூண்டில் சிக்கியது
பந்தலுார்; நீலகிரி எல்லையில் உள்ள, வயநாடு மாவட்டம் புல்பள்ளி, அமரகுனி சுற்றுவட்டார பகுதிகளில் மக்களை அச்சுறுத்தி வந்த புலி கூண்டில் சிக்கியது.நீலகிரி மாவட்ட எல்லையை ஒட்டிய, கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள புல்பள்ளி, அமரகுனி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த, 10 நாட்களாக புலி ஒன்று மக்களை அச்சுறுத்தி வந்தது. வளர்ப்பு விலங்குகளை புலி தாக்கி கொன்று வந்ததால், புலியை பிடிக்க இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். அதனை தொடர்ந்து. புலியை மயக்கி ஊசி செலுத்தி பிடிக்க கடந்த, 5 தினங்களுக்கு முன்பு உத்தரவும் கிடைத்திருந்தது. ஆனால், புலியை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் பின்னடைவை சந்தித்து வந்தனர். 5 இடங்களில் கூண்டுகள் வைத்து வனத்துறையினர் காத்திருந்தனர். இந்நிலையில், நேற்று இரவு துப்புரா பகுதியில் புலி நடமாடிய காட்சிகள் வெளியாகி இருந்தன. அதே பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் நள்ளிரவில் புலி சிக்கியது.வனததுறையினர் கூறுகையில், 'கூண்டில் சிக்கியது, 8 வயது மதிக்கத்தக்க பெண் புலி. முதற்கட்டமாக புலி குப்பாடி பகுதியில் உள்ள வனவிலங்குகள் மீட்பு மற்றும் சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. முதலில் அதன் உடல்நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டு தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு, பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தெரியப்படுத்தப்படும்,' என்றனர்.