ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர்களால் அமைக்கப்பட்ட பிரமிடு; சுற்றுலா பயணிகள் வியப்பு
ஊட்டி; ஊட்டியில் பேன்சி மலர்களை கொண்டு உருவாக்கப்பட்ட 'பிரமிடு' வடிவமைப்பு, சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.ஊட்டிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், ஆண்டு தோறும் ஏப்., மே மாதங்களில் கோடை சீசன்; அக்., நவ., மாதங்களில் இரண்டாவது சீசனும் நடக்கிறது. சீசனின் போது, ஒரு மாதம் நடத்தப்படும் கோடை விழாவின் போது, ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.அதில், நுாற்றாண்டு பழமை வாய்ந்த, ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு வரும் பயணிகள், அங்குள்ள பழமையான மரங்கள் கண்ணாடி மாளிகை, பெரணி இல்லம், ஜப்பான் பூங்கா, இத்தாலியன் கார்டன், இலை பூங்கா, பெரிய புல்வெளி மைதானம், மலர் மாடங்களில் பல வண்ண மலர்களை கண்டு ரசித்து செல்கின்றனர்.இந்நிலையில், நடப்பாண்டு கோடை விழாவை ஒட்டி பூங்காவில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணியர் ரசிக்கும் வகையில், 'பேன்சி' மலர் தொட்டிகளை வைத்து பூங்காவில் 'பிரமிடு' போன்ற சிறப்பு அலங்காரம் வைக்கப்பட்டுள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் வெகுவாக ரசித்து செல்கின்றனர். தோட்டக்கலை உதவி இயக்குனர் பீபிதா கூறுகையில், ''பூங்காவின் இரண்டு இடத்தில், 1,000 தொட்டிகளில் பிரமிடு வடிவமைக்கப்படுள்ளது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. மலர் மாடங்களில் பூந்தொட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டு பூக்கள் பூத்துள்ளன. அவற்றை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்,'' என்றார்