இ--பாஸ் எடுக்காமல் வரும் சுற்றுலா பயணிகள்; விடுமுறை நாட்களில் போக்குவரத்து நெரிசல்
கூடலுார்; கேரளாவில் இருந்து நீலகிரிக்கு வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள், இ-பாஸ் எடுக்காமல் வந்து நாடுகாணியில் நடக்கும் வாகன சோதனையின் போது- பாஸ் எடுப்பதால், நாடுகாணியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு கூட்டம் அதிகரித்து வருதால் நெரிசலை கட்டுப்படுத்தவும், வாகன எண்ணிக்கையை கணக்கெடுக்கவும் கோர்ட் உத்தரவுப்படி, நீலகிரிக்கு வரும் வெளி மாவட்ட மற்றும் மாநில வாகனங்களுக்கு இ-பாஸ் முறை, மே, 7ல் இருந்து நடைமுறையில் உள்ளது.இந்த நடைமுறை ஜூன், 30-ம் தேதி முடிந்த நிலையில், மறு உத்தரவு வரும் வரை இந்த நடைமுறையை சென்னை ஐகோர்ட் நீட்டித்துள்ளது.இந்நிலையில், கேரளாவில் இருந்து நாடுகாணி வழியாக நீலகிரிக்கு வரும், சுற்றுலா பயணிகள் பலர் முன் ஏற்பாடாக, இ-- பாஸ் பதிவு செய்யாமல் வருகின்றனர். மாநில எல்லையில் பணியில் உள்ள ஊழியர்கள், வாகனங்களை நிறுத்தி அவர்களை இ-பாஸ் எடுக்க வைத்து, ஊட்டிக்கு அனுப்புகின்றனர்.வார விடுமுறை நாட்களில் இதே நிலை தொடர்வதால், வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து செல்ல வேண்டி உள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஓட்டுனர்கள், சுற்றுலா பயணிகள் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.ஓட்டுனர்கள் கூறுகையில், 'வார இறுதி நாட்களில் தொடரும் வாகன நெரிசலை தவிர்க்க, எல்லையில், 'நீலகிரிக்குள் நுழைய இ----பாஸ் கட்டாயம்,' என்ற அறிவிப்பை தமிழ், ஆங்கிலம், மலையாள மொழிகளில் வைக்க வேண்டும்,' என்றனர்.