பொலிவு பெறாத மூலிகை தோட்டம்: சுற்றுலா பயணியர் ஏமாற்றம்
கோத்தகிரி: -கோத்தகிரி கோடநாடு காட்சி முனையில், மூலிகை தோட்டம் அமைக்கும் பணி கிடப்பில் விடப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணியர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்களில், கோடநாடு காட்சிமுனை முக்கியத்துவம் பெற்றுள்ளது. நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணியர் கோடநாடு காட்சி முனையை கண்டுகளிக்க தவறுவது இல்லை. கோத்தகிரியில் இருந்து, 18 கி.மீ., தொலைவில் உள்ள இந்த காட்சிமுனையில் இருந்து, பள்ளத்தாக்கில் உள்ள தெங்குமரஹாடா அழகிய கிராமம், வளைந்து நெளிந்து ஓடும் மாயாறு, வரலாற்று சிறப்புமிக்க திப்பு சுல்தான் கோட்டை உள்ளிட்டவை, பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக உள்ளது. இங்கு சிறுவர்கள் விளையாட தேவையான அம்சங்கள் இல்லாததால், சிறுவர்களை மகிழ்விக்கவும், கல்லூரி மாணவர்களின் ஆய்வுக்காகவும், காட்சி முனையின் கீழ்பகுதியில், மூலிகை தோட்டம் அமைக்க, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்டமாக, இங்கு ஆக்கிரமித்து இருந்த சீகை மரங்கள் மற்றும் காட்டு செடிகள் அகற்றப்பட்டதோடு, இதுவரை மூலிகை தோட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், பெற்றோருடன் இங்கு வரும் சிறுவர்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். எனவே, பயணியர் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், அரசுக்கு போதிய வருவாய் கிடைக்கவும் மூலிகைத் தோட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.