நீலகிரி மாவட்ட சுற்றுலா மையங்களில் பயணிகள் கூட்டம்
ஊட்டி; ஆயுதபூஜை தொடர் விடுமுறை காரணமாக, மாவட்டத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா மையங்களை பயணிகள் முற்றுகையிட்டனர். ஊட்டியில் இரண்டாவது சீசன் துவங்கியுள்ள நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகை கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில், 'ஆயுத பூஜை, தசரா பள்ளி காலாண்டு விடுமுறை,' என, தொடர் விடுமுறை காரணமாக, கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் இருந்தும் சமவெளி பகுதியில் இருந்தும், சுற்றுலா பயணிகளின் வருகை, ஊட்டி மற்றும் மாவட்டத்தின் பிற சுற்றுலா மையங்களில் அதிகரித்து காணப்பட்டது. அரசு தாவ ரவியல் பூங்கா, கர்நாடகா தோட்டக்கலை பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா மற்றும் தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட முக்கிய மையங்களில், பள்ளி மாணவர்கள் உட்பட, சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்த நிலையில், பூங்காக்களில் மலர்கள் பூத்து குலுங்குவது, சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இதமான காலநிலை நிலையில், இயற்கை காட்சிகளை கண்டுகளித்து சுற்றுலா பயணிகள் குதுாகலம் அடைந்தனர். ஊட்டி தொட்டபெட்டா, குன்னுார் சாலை, பிங்கர்போஸ்ட் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் சுற்றுலா வாகனங்கள் அணி வகுத்து நின்றன.