உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ரூ.20.74 லட்சம் வாடகை பாக்கி வியாபாரிகள் சங்க அலுவலகத்துக்கு சீல்

ரூ.20.74 லட்சம் வாடகை பாக்கி வியாபாரிகள் சங்க அலுவலகத்துக்கு சீல்

குன்னுார், ; குன்னுார் மார்க்கெட்டில், 20.74 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி வைத்த, மார்க்கெட் வியாபாரிகள் சங்க அலுவலகத்துக்கு 'சீல்' வைக்கப்பட்டது.குன்னுார் மார்க்கெட் கடைகளுக்கு, நகராட்சி வாடகை வசூலித்து வருகிறது. பல கடைகள் உள் வாடகை விடப்பட்டு இருந்த நிலையில், பல ஆண்டுகளாக வாடகையும் உயர்வு செய்யப்படாமல் இருந்தது. கடந்த தேர்தலின்போது, 'மார்க்கெட் கடை வாடகை பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும்,' என, வாக்குறுதி அளித்து, தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றது. அதன்பின், வாடகை உயர்வு செய்யப்பட்டதுடன், '2016ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை மறு மதிப்பீடு செய்த வாடகை நிலுவை தொகை மற்றும் 2019முதல் 2022 வரையில், 3 ஆண்டுகளுக்கு 15 சதவீதம் வாடகை உயர்வு செலுத்த வேண்டும்,' என, உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து, தொகையை வசூலிக்க நகராட்சி தீவிரம் காட்டி 'சீல்' வைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியது. அதில், பல லட்சம் பாக்கி வைத்த வியாபாரிகள் சங்க அலுவலகத்திற்கு சீல் வைக்காமல் மற்ற கடைகளுக்கு மட்டுமே சீல் வைக்க அதிகாரிகள் தீவிரம் காட்டினர்.இந்நிலையில், 20 லட்சத்து 74 ஆயிரத்து 414 ரூபாய் வாடகை பாக்கி வைத்திருந்த மார்க்கெட் வியாபாரிகள் சங்க அலுவலகத்துக்கு, கமிஷனர் இளம்பரிதி உத்தரவின் பேரில், உதவி வருவாய் அலுவலர் சரவணன், வருவாய் ஆய்வாளர் சையது இப்ராகிம் மற்றும் ஊழியர்கள், 'சீல்' வைத்து நோட்டீஸ் ஒட்டினர். இதே போல, ஒரு லட்சத்திற்கு மேல் பாக்கி வைத்துள்ள மேலும், 3 கடைகளும் சீல் வைக்கப்பட்டன.அதிகாரிகள் கூறுகையில்,'அதிகபட்சமாக வாடகை பாக்கி வைத்த வியாபாரிகள் சங்க அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதுடன் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை, 350 கடைகள் வரை வாடகை பாக்கியை செலுத்தியுள்ளன. வாடகை செலுத்தாத கடைகளுக்கு 'சீல்' வைக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ