சேதமான சாலையில் வாகன போக்குவரத்து நிறுத்தம்
பந்தலுார் : பந்தலுார் அருகே கையுன்னி பகுதியில் சேதமான சாலையில், வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கையுன்னி அருகே போத்துக்கொல்லி, பைங்கால் சப்பந்தோடு சாலை அமைந்துள்ளது. 2 கி.மீ., துாரம் உள்ள இந்த சாலையை சீரமைத்து பல ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது சாலை முழுவதும் சேதமடைந்து கற்கள் மட்டும் காணப்படுகிறது.இதனால், சாலையில் வாகன போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு உள்ளது. இங்கு அரசு பஸ் வசதி இல்லாத நிலையில், விவசாயிகள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் ஆட்டோ போன்ற வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, சாலை மிகவும் சேதமானதால், வாகனங்கள் ஏதும் செல்லாத நிலையில், 2 கி.மீ., துாரத்தை நடந்து கடக்க வேண்டி உள்ளது. விவசாயிகள் தங்கள் விவசாய விளை பொருட்களை தலைசுமையாக எடுத்து செல்ல வேண்டிய நிலையில், கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி, கிராம மக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தியும், தீர்வு கிடைக்கவில்லை. எனவே, பொதுமக்கள் பயன்படுத்த ஏதுவாக இந்த சாலையை சீரமைத்து தர மாவட்ட நிர்வாக அதிகாரிகள் முன்வர வேண்டும்.