விவசாயிகளுக்கு கண்டுணர்வு சுற்றுலா பயிற்சி
கூடலுார்: கூடலுார் தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை சார்பில், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு பயிர்கள் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்த இரண்டு நாள் கண்டுணர்வு சுற்றுலா பயிற்சி முகாம், ஒட்டன்சத்திரம் மார்க்கெட் பகுதியில், 2ம் தேதி துவங்கியது. அதில், இளநிலை ஆராய்ச்சியாளர் சதீஷ், ‘காய்கறி மகத்துவ மையத்தில் இண்டோ -இஸ்ரேல் கூட்டுத்திட்டம்; உயர் தொழில்நுட்ப பசுமை குடில்களில் வெண்டைக்காய், வெள்ளரி, மிளகாய், தக்காளி உற்பத்தி, காய்கறி ஒட்டுக்கட்டுதல் தொழில்நுட்பம், மண்புழு உர உற்பத்தி, காளான் உற்பத்தி, உயிர் கட்டுப்பாடு காரணிகள் உற்பத்தி,’ குறித்து விளக்கினார். தொடர்ந்து, ஒட்டன்சத்திரம் காய்கறி வியாபாரிகளை சந்தித்து, கூடலுாரில் விளையும் காய்கறி பயிர்களை சந்தைப்படுத்துதல் குறித்த ஆலோசனை நடந்தது. பயிற்சி முகாம் நேற்று முன்தினம், நிறைவு பெற்றது. முகாமில், தொழில்நுட்ப மேலாளர் ரூபீனா, உதவி தொழில்நுட்ப மேலாளர் ஜெகதீஸ்வரன், 40 விவசாயிகள் பங்கேற்றனர்.