பசுமை வனத்தில் பயணிப்பது புதிய அனுபவம்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
கூடலுார்: 'பசுமைக்கு மாறியுள்ள முதுமலை சாலையில் பயணிப்பது புதிய அனுபவமாக உள்ளது,' என, சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில், கடந்த ஆண்டு நவ., மாதம் துவங்கிய பனி பொழிவு தொடர்ந்து வனப்பகுதியில் தாவரங்கள் கருகி மரங்களில் இலைகள் காய்ந்து உதிர்ந்து வறட்சி ஏற்பட்டது.வனவிலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. நடப்பாண்டு மார்ச் மாதம் வரை இந்நிலை தொடர்ந்தது. கடந்த மூன்று மாதமாக மழை தொடர்ந்ததால் முதுமலை வனப்பகுதி வறட்சி மாறி பசுமையான சூழ்நிலைக்கு மாறி உள்ளது. பசுமைக்கு மாறிய வனப்பகுதி சாலையில் பயணிப்பது புதிய அனுபவமாக உள்ளதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.சுற்றுலா பயணிகள் கூறுகையில், 'ஆண்டு துவக்கத்தில் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக, வனப்பகுதி பசுமை இழந்து காணப்பட்டது. தற்போது, வனப்பகுதி பசுமையாக மாறி இருப்பதால் மகிழ்ச்சியாக உள்ளது. மேலும், தெப்பக்காடு - மசினகுடி சாலையின் இரு புறமும் உள்ள மரங்கள், சாலையை ஒட்டி சாய்ந்து குகை போன்று காட்சியளிப்பதும், அதில் பயணிப்பதும் புதிய அனுபவமாக உள்ளது,' என்றனர்.