நடைபாதையை சீரமைக்க பழங்குடியினர் எதிர்பார்ப்பு
கூடலுார்; 'கூடலுார், புளியம்பாறை மஞ்சமூலா கிராமத்திலிருந்து, புளியம்வயல் வரையிலான நடைபாதையை சீரமைத்து தர வேண்டும்,' என, பழங்குடியினர் வலியுறுத்தி உள்ளனர்.கூடலுார், புளியம்பாறை அடுத்துள்ள மஞ்சமூலா கிராமத்தில், பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இக்கிராம மாணவர்கள் புளியம்பாறையில் உள்ள அரசு பள்ளியில் கல்வி பயின்று வருகின்றன.இதற்காக, கிராமத்திலிருந்து, வயல் வழியாக உள்ள நடைபாதையில் ஒரு கி.மீ., நடந்து, புளியம்வயல் வந்து, அங்கிருந்து ஆட்டோவில் அரசு பள்ளிக்கு சென்று வருகின்றனர். இவர்கள் கிராமத்துக்கு ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் இயக்க முடியாத அளவுக்கு பாதை சேதமடைந்து உள்ளது. இதனால் தான், அக்கிராமத்தை சேர்ந்த பழங்குடி மாணவர்கள், ஒற்றையடி பாதையை மட்டும் பயன்படுத்தி வருகின்றனர்.இந்த பாதையும் மழை காலத்தில் சேறும், சகதியுமாக மாறிவிடுவதால், மாணவர்கள் நடந்து செல்ல சிரமப்பட்டு வருகின்றனர். இவர்களின் நிலையை கருத்தில் கொண்டு, புளியம்வயல் முதல் மஞ்சமுலா இடையே மாணவர்கள் பயன்படுத்தி வரும் நடைபாதையை, சிறிய வாகனங்கள் இயக்கும் வகையில் சீரமைத்து தர வேண்டும்.