இயற்கை காய்கறிகளை விளைவித்த பழங்குடியினர் கூட்டு வேளாண்மை திட்டத்தில் அசத்தல்
குன்னுார்: யானை பள்ளம் பழங்குடியின கிராமத்தில் கூட்டு வேளாண்மையில், தோட்டம் அமைத்து ரசாயனம் இல்லாத காய்கறிகள் அறுவடை செய்யப்பட்டது.குன்னுார் அருகே யானைபள்ளம் கிராமத்தில், பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். இங்கு, தேசிய தோட்டக்கலை வளர்ச்சி இயக்க திட்டத்தின் கீழ், சமுதாய காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டது. அதில், நிழல்வலை கூடாரம் அமைத்து, கிராம மக்களை ஒருங்கிணைத்து, எவ்வித ரசாயன மருந்துகள், உரங்கள் பயன்பாடின்றி, இயற்கை முறையில் கீரைவகைகள், காய்கறிகள் விளைவிக்க அறிவுறுத்தப்பட்டனர்.சாகுபடிக்கு தேவையான விதைகள், அங்கக இடுபொருட்கள், தெளிப்பான்கள் தோட்டக்கலை துறை வழங்கியது. கிராமத்தின் நடுவில் இருந்த தரிசு நிலத்தை சுத்தம் செய்து, நிழல்வலை, கூடாரத்தில் காய்கறிகள் சாகுபடி செய்தனர். கிராம பெண்கள் மற்றும் விவசாயிகள் விளைவித்த கீரைகள், முள்ளங்கி, கத்திரி, புருக்கோலி மற்றும் இதர காய்கறி பயிர்களை அறுவடை செய்தனர்.இதற்கான வயல் அறுவடை திருவிழா கிராமத்தில் நடந்தது. விழாவில், தோட்டக்கலை இணை இயக்குனர் சிலிலா மேரி பேசுகையில்,'பழங்குடியின பெண்கள் ஊட்டச்சத்து இன்றி, ஆரோக்கியம் குறைந்திருந்த நிலையில், தேவையான சமச்சீர் சத்துக்களை அளித்து, பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவே இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது,' என்றார்.தோட்டக்கலை உதவி இயக்குனர், விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். துணை தோட்டக்கலை அலுவலர் கிருஷ்ணன், உதவி தோட்டக்கலை அலுவலர் சரவணன், அட்மா திட்டத்தின் வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராகேஷ், உட்பட பலர் பங்கேற்றனர்.