கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி
பந்தலுார்; வயநாடு பேரிடரின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. கடந்த, 2024ம் ஆண்டு ஜூலை, 30ஆம் தேதி நள்ளிரவு, 1:30 மணிக்கு, தமிழகத்தின் எல்லையோர பகுதியில் உள்ள, கேரளா மாநிலம் வயநாடு மேப்பாடி அருகே படவெட்டிக்குன்னு, சூரல்மலை, முண்டக்கை, அட்டைமலையில் பெரும் நிலச்சரிவு ஏற்ப்பட்டது. 298 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். 32 பேரின் உடல்கள் இதுவரை கிடைக்கவில்லை. 435 வீடுகள், 71 கடைகள் காணாமல் போயின. ஏழு நாட்கள் மீட்பு பணி நடந்தது. உடல்கள் புத்துமலை பகுதியில் அடக்கம் செய்யப்பட்டன. உறவுகளையும், வீடுகளையும் இழந்து தவித்தவர்களுக்கு அரசு பல்வேறு பகுதிகளிலும் வாடகை வீடுகளை ஒதுக்கீடு செய்தது. அவர்களுக்கு அரசு தரப்பில் கட்டப்படும் வீடுகள், டிச., மாதம் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், புத்துமலையில் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட பகுதியில்,நேற்று உறவினர்கள், பொதுமக்கள், அரசு நிர்வாகம் இணைந்து, முதலாமாண்டு நினைவஞ்சலியை செலுத்தினர். அப்போதும், நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்களின் உறவினர்கள் கண்ணீர் சிந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டது அனைவரையும் கலங்க வைத்தது. மேலும், வயநாடு அருகே உள்ள, நீலகிரி மாவட்டம் பந்தலுார் சேரம்பாடி பகுதியில் வணிகர்கள் சங்கம் சார்பில், அனைத்து தரப்பினர் பங்கேற்ற நிகழ்ச்சியில், இறந்தவர்களின் 'போட்டோக்களை' வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், திரளான மக்கள் பங்கேற்றனர்.