முள்ளம் பன்றி இறைச்சியை சமைத்து உட்கொண்ட இருவர் கைது
கோத்தகிரி; கோத்தகிரி அருகே, முள்ளம் பன்றி இறைச்சியை சமைத்து உட்கொண்ட இருவரை வனத்துறையினர் கைது செய்தனர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ராம்சந்த் -தாந்தநாடு இடையே, கடந்த, 8ம் தேதி, வாகனம் மோதி இறந்த முள்ளம் பன்றியை, பைக்கில் அடையாளம் தெரியாத நபர் எடுத்து சென்றுள்ளார். அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி., கேமரா பதிவை வைத்து, வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அதில், 'கோத்தகிரி தாந்தநாடு பகுதியில் வசித்து வரும், ராஜூதாபா,32, என்பவர் பன்றியை எடுத்து சென்றுள்ளார். அதனை, அங்குள்ள காளான் கம்பெனி உரிமையாளர் கோத்தகிரி ஒரசோலை பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவருக்கு கொடுத்துள்ளார். தொடர்ந்து, ராஜூ தாபாவின் மைத்துனர் ஜோசப்,30, பன்றியை சுத்தம் செய்து, இறைச்சியை சமைத்தார். மூவரும் உட்கொண்டனர்,' என்பது உறுதி செய்யப்பட்டது. இக்குற்றத்தில் தொடர்புடைய, ராஜூதாபா, ஜோசப் ஆகியோர் கைது செய்யப்பட்டு, இறைச்சி, கத்தி மற்றும் சமையல் பாத்திரங்களை பறிமுதல் செய்து, குன்னுார் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவான காளான் கம்பெனி உரிமையாளர் மகேந்திரனை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.