உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / செந்நாய்களை விஷம் வைத்து கொன்ற வழக்கில் இருவர் கைது

செந்நாய்களை விஷம் வைத்து கொன்ற வழக்கில் இருவர் கைது

கூடலுார்:நீலகிரி மாவட்டம், ஆனைகட்டி அருகே வனப்பகுதியில், கடந்த மாதம், 27ம் தேதி, இரண்டு பெண் செந்நாய்கள் இறந்து கிடந்தன. அதன் உடலை முதுமலை கால்நடை மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். செந்நாய்கள் உடல் மாதிரிகளை ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பினர்.இதில், செந்நாய்கள் உட்கொண்ட இறைச்சியில் விஷம் கலந்திருப்பதும், அதன் காரணமாகவே உயிரிழந்ததும் தெரிய வந்தது. வனச்சரகர் தயானந்தன் தலைமையில், வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.இது தொடர்பாக, தெங்குமரஹடா பகுதியை சேர்ந்த பெண்டன், 48, ஆனைகட்டியைச் சேர்ந்த சந்திரன், 54, ஆகியோரை வனத்துறையினர் கைது செய்து, அவர்களிடம் இருந்து மான் எலும்புகள், கத்தி, பூச்சி மருந்து பாட்டிலை பறிமுதல் செய்தனர்.வனத்துறையினர் கூறுகையில், 'மாமிச உண்ணி வேட்டையாடி விட்டு சென்ற மான் இறைச்சியை இவர்கள் இருவரும் எடுத்து சென்று சமைத்து உட்கொண்டு, மீதம் இருந்த மான் இறைச்சியில் விஷத்தை கலந்து, வேறு பகுதியில் வைத்துள்ளனர். அதை உட்கொண்ட செந்நாய்கள் இறந்துள்ளன' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ